ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு தீர்வு கிட்டுமா??
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ‘உயிர்த்த ஞாயிறு’ தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிர் பலியெடுக்கப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகாயப்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் நடந்து ஐந்து வருடங்களை கடந்துள்ள போதிலும் அது இஸ்லாமிய சமூகம் மீது பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.
இப்பயங்கரவாத குண்டு தாக்குதலால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முனைந்தனர். பல அப்பாவிகள் அப்பட்டமாக பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும், குறிப்பிட்டு கூறவேண்டிய விடயமாக இத்தாக்குதலுடன் சம்மந்தப்பட்டவர்கள் எவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை .
நல்லாட்சி அரசாங்கத்தின் ரணில், மைத்திரி ஆட்சியில் இச்சம்பவம் நிகழ்ந்து அதற்கு பின்னரான கோத்தபாய அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரை ஆட்சிக்கு வந்த போதிலும் நீதி நிலை நாட்டப்படவில்லை என்பது கலலைக்குரிய விடயமாகும்.
அரசியல் இலக்கினை அடையும் திட்டம்
இது குறித்து முன்னால் கிண்ணியா நகர சபை உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளனத்தின் செயலாளருமான எம்.எம்.மஹ்தி தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இலக்கு முஸ்லிம்களை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதே 2019.04.21 ஞாயிற்றுக் கிழமை நடாத்தப் பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலானது திட்டமிட்டு ஒரு அரசியல் இலக்கினை அடைவதற்காக அரங்கேற்றப்பட்ட ஒன்றாகும்.
இத்தாக்குதலின் காரணமாக 270 க்கும் மேற்பட்டோர் மரணித்தது மாத்திரமன்றி 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு உபாதைகளுக்கும் உள்ளானார்கள்.
இலங்கையின் வரலாற்றில் இத்தாக்குதலானது மறக்க முடியாததும் மன்னிக்க முடியாததுமாகும்.
இந்த தாக்குதல் காரணமாக உயிர்களை இழந்தவர்களுக்கோ உபாதைகளுக்கு உள்ளானவர்களுக்கோ தமது சொத்துக்களை இழந்தவர்களுக்கோ இதுவரை எந்த ஒரு நீதியோ நியாயமோ இழப்பீடுகளோ வழங்கப்படாமையானது கவலையான விடயமாகும்.
இந்நிலையில், இத்தாக்குதலானது குறிப்பிட்ட ஒரு சிலரால் அரசியல் இலாபங்களை அடைவதற்காக திட்டமிடப்பட்டு கூலிக்கு அமர்த்தப்பட்ட இஸ்லாமிய பெயர்களைக் கொண்ட ஒரு குழுவினரால் அரங்கேற்றப்பட்டது என்பது பல்லின சமூகம் வாழுகின்ற இந்நாட்டில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மை மீது சுமத்தப்பட்ட குற்றம்
சிறுபான்மை சமூகமாக வாழுகின்ற கிறிஸ்தவ கத்தோலிக்க மக்கள் மீது அதே சிறுபான்மை இனமாக வாழுகின்ற இஸ்லாமிய பெயர் தாங்கிகளை கொண்டு நடாத்தப்பட்ட இந்த தாக்குதலை திட்டமிடுவதற்கோ நடாத்துவதற்கோ இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு தேவையும் இருக்கவில்லை.
முஸ்லிம் சமூகம் அவ்வாறு சிந்திக்கவும் இல்லை. ஆனாலும் அரசியல் இலாபங்களை அடைவதற்காக திட்டமிட்ட அந்த சூத்திரதாரிகள் இரண்டு சிறுபான்மை சமூகங்களையும் மோதவிட்டு அதில் குளிர்காய்வதையே இலக்காக கொண்டிருந்தார்கள்.
அதன் அடிப்படையில் பல்வேறு பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் கிறிஸ்தவ கத்தோலிக்க மக்கள் சந்தித்ததோடு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட முஸ்லிம் சமூகமும் பல உயிர்களை இழப்பதற்கும் கோடிக்கணக்கான சொத்துக்களை அழிப்பதற்கும் காரணமாக அமைந்து விட்டது.
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களோ கிறிஸ்தவ மக்களோ முஸ்லிம்கள் மீது கோபம் கொள்ளவில்லை.
சந்தேகம் கொள்ளவில்லை. தாக்குதல்களை நடாத்தவில்லை. சொத்துக்களை தீயிட்டு அழிக்கவில்லை.
மாறாக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த காடையர்களே முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தினார்கள்.
திட்டமிட்டு செய்யப்பட்ட சதி
முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் பள்ளிகள் மீதும் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட காடையர்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது இந் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுகின்றனவா? என்பதை கேள்வியாக எழுப்புகின்றது.
இவ்வாறான ஒரு தாக்குதலை திட்டமிட்டு நடத்துவதற்கு இஸ்லாமிய சமூகத்திற்கு எந்த ஒரு தேவையும் இருக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
நாட்டின் சட்ட திட்டங்களையும் இறைமையையும் மதித்து நடக்கின்ற முஸ்லிம் சமூகம் வேண்டுமென்று திட்டமிடப்பட்டு இச்சம்பவத்தின் ஊடாக குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணை குழுக்கள், ஆணைக்குழுக்கள், பொலிஸ் குழுக்கள் புலனாய்வு குழுக்கள் என பல்வேறு விசாரணைகள் நடைபெற்றும் உண்மையான சூத்திரதாரி இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்பது இந்நாட்டின் இறைமையும் சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குள்ளாக்குகின்றது.
இரண்டு சிறுபான்மை சமூகங்களையும் மோத விடுவதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்கின்ற மாயை கருத்தியலை உண்டாக்கி பூதாகரமாக மாற்றி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கின்ற திட்டமிடலே இங்கு அரங்கேற்றப்பட்டிருக்கின்றது என்பதை தற்போது அது குறித்து நடைபெறுகின்ற வாதப்பிரதிவாதங்கள் கருத்தாடல்கள் மூலமாக நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
வெளியாகும் உண்மைகள்
மேலும் இத்தாக்குதல் மூலம் முஸ்லிம் சமூகத்தை அடிப்படை வாத, பிரிவினைவாத, மதவாத கொள்கை கொண்டவர்கள் எனும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்குவதன்படி, அவர்கள் மீது வெறுப்புகளை ஏற்படுத்தி பௌத்த, இந்து, கத்தோலிக்க மக்களிடத்தில் இருந்து தூரமாக்கி குற்றவாளிகளாக காட்டுவதன் நோக்கில் அவர்களுக்கு எதிராக சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டும் என்கின்ற வெறுப்புணர்வு நாடகத்தின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மீது பழி தீர்ப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்தது என்பது மத தலைவர்கள், புலனாய்வாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் அண்மைய கருத்துகளிலிருந்து நாங்கள் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றன.
ஆனாலும் இச்சம்பவத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப்படுவதற்கோ அதற்காக திட்டமிடுவதற்கோ அதன் மூலம் ஏதேனும் இலாபங்களை அடைவதற்கோ எந்த ஒரு தேவையையும் இருக்கவில்லை என்பதை கிறிஸ்தவ கத்தோலிக்க மதத் தலைவர்களும் மக்களும் திடமாக கூறி வந்தனர்.
முஸ்லிம் சமூகத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றி பழி தீர்க்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தாலும் இத்தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவித தொடர்புகளும் இருக்கவில்லை.
அவர்களுக்கு அவ்வாறான எந்த ஒரு தேவையும் இருக்கவில்லை என்பதையும் தற்போது ஈஸ்டர் தாக்குதல் குறித்து நடைபெறுகின்ற கருத்தாடல்கள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன.
எனவே இவ்வாறான மோசமான சம்பவங்கள் பல்லின சமூகங்கள் வாழ்கின்ற இலங்கை போன்ற ஒரு நாட்டில் எதிர்காலத்தில் நடைபெற கூடாது என்பதனை நாங்கள் உணரக்கூடியதாக இருக்கின்றது என சுட்டிக்காட்டினார்.
நீதிக்கான காத்திருக்கும் சமூகம்
இந்த நிலையில் தான் கடந்த 5 வருடங்களாக இந்த தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களும், இத்தாக்குதல்களைப் பயன்படுத்தி அரசினால் அரசியல் இலாபம் கருதி நடத்தப்பட்ட வேட்டைகளினாலு,ம் இனவாதிகளினால் நடத்தப்பட்ட இன, மத வெறித் தாக்குதல்களினாலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களும் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்.
குறித்த தாக்குதலின் பின்னர் பல வன்முறைச் சம்பவங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன இதன் காரணமாக 2019 மே 13 ல் குருநாகல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களினால் பள்ளிவாயல்கள், வியாபார தளங்கள் இன்னும் பல உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன் தீயிட்டு சென்ற சம்பவங்களும் காடையர்களால் அரங்கேற்றப்பட்டன.
இதன் போது கொட்டரமுல்லை பகுதியை சேர்ந்த 45 வயதான இஸ்லாமியர் ஒருவர் புனித நோன்பு காலத்தில் வாயில் அசிட் விடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சுமார் 2289 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதுடன் இராணுவம் பொலிஸாரை கொண்டு முஸ்லிம் பிரதேசங்கள் சுற்றிவளைக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளும் பரிசோதனை செய்யப்பட்டு வித்தியாசமான பார்வையை இச்சமூகம் மீது திணித்தார்கள்.
இத் தாக்குதல் சம்பவம் குறித்து அகில இலங்கை இளைஞர் வாலிப மன்றத்தின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் எம்.எம்.எம்.முக்தார் தெரிவிக்கையில்,
இது ஒரு திட்டமிட்ட ஒரு இனத்தை நோக்கிய சதிவலை அதாவது இலங்கை நாட்டின் சிறுபான்மை இனமாக தமிழ் முஸ்லிம் கிறித்தவம் ஆகியனவாகும்.
இதில் கடந்தகால யுத்த முடிவில் தமிழ் இன வன்முறை வெற்றி கொண்டதையடுத்து, இலக்கு வைக்கப்பட்ட இனம் முஸ்லிம் சமூகம் விஷேடமாக இந்த நிகழ்ச்சி நிரலின் பின்னணியாக அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் மற்றும் இந்தியா நாட்டின் தலையீடு இருந்ததை குறிப்பிடலாம்.
அதிகார மமதையின் வெளிப்பாடு
அதிலும் 2009ஆண்டு யுத்த வெற்றிக்கு பின்னர், அதிகார மமதை தலைக்குமேல் வந்த ராஜபக்ஷ குடும்பம் இது ஒரு ஜனநாயக நாடு என்ற ஒன்றை மறந்து இனவாதிகளாக பயிற்றப்பட்ட குழுக்களுடன் கைகோர்த்து முதல் செயல் திட்டம் ஆக கருத முடியும்.
அதே போன்று இரண்டாவதாக இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக சான்றுகள் கிரியைகளை இல்லாமல் செய்வதற்கு தௌஹீத் ஜமாத் ஊடுருவல் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து முஸ்லிம் சார்ந்த கருத்துருக்களுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களின் உரிமை சார்ந்த விடயங்கள் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கமாக்கப்படுவதுடன் சிங்கள சமூகத்திற்கு முரணான கருத்துக்கள் ஊடகத்தின் ஊடாக தரப்படுகின்றது.
இதனை வழுவூட்ட இறுதியாக பயன்படுத்திய சிறந்த இனவாத ஆயுதமே உயிர்த் ஞாயிறு தாக்குதல். இது ஒட்டுமொத்த இனவாதிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இருந்தபோதிலும் அவர்கள் இன்னும் அதனை அதிகார பூர்வமாக வைத்துக் கொள்ளவே பல கைதுகளை செய்தனர்.
எனவே இது எனது பார்வையில் திட்டமிடப்பட்ட ஒரு இனவாத ஒப்பந்தமாகவே அவதானிக்க அல்லது கருத முடிகின்றது என தெரிவித்திருந்தார்.
குறித்த தாக்குதலுக்குப் பிறகு நீதியற்ற முறையில் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக ஏராளமான முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
தாக்குதல்களுக்குக் காரணமான முஸ்லிம்கள் பற்றிய கடுமையான விமர்சனங்களையும், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடனான ஒருமைப்பாட்டின் வெளிப்பாட்டையும் கொண்ட கவிதைகளையும் எழுதிய ஆசிரியரும் இளம் முஸ்லிம் கவிஞருமான அஹ்னப் ஜஸீம் இவ்வாறான தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்த நிகழ்வுகளுக்கு முகம் கொடுத்தவர்களில் ஒருவராவார்.
திருப்தியில்லா அறிக்கை..
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் பகிரங்கமாக கண்டித்தவரும் முஸ்லிம் வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இவ்வாறான மற்றுமொருவராவார். இவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இது போன்று முஸ்லிம்களில் பல இஸ்லாமிய அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்களும் அடைக்கப்பட்டதுடன் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் கூட இந்த குற்றச்சாட்டில் பொய்யான வழக்குகளை இட்டு கைது செய்யப்பட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்பது புதியவை அல்ல. அவை 2013 முதலே நடைபெற்று வருகின்றன. 2013 இல் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல், 2014 இல் பொது பல சேனாவின் பின்னணியில் அரங்கேறிய அளுத்கம வன்முறைகள், 2017 ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்த வன்முறைகள், 2017 நவம்பரில் கிந்தோட்டையில் இடம்பெற்ற வன்முறைகள், 2018 மார்ச்சில் இடம்பெற்ற கண்டி, திகன வன்முறைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்களின் மீது திணிக்கப்பட்ட ஒரு வன்முறையாக தூண்டப்பட்ட சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. அப்போதைய கால கட்டத்தில் பெண்கள் முகத்தை மூடுவதற்கு கூட அரசாங்கம் தடை விதித்தது. இதனால் மத சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது பெரும்பாலாக ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் குற்றவாளிகளாக பார்க்கப்பட்டனர்.
எனவே சமூகத்தில் அவர்கள் எதிர்ப்பு மற்றும் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகினர். அரசாங்கத்தினால், முஸ்லிம்களுக்கு எதிராக சில நம்பிக்கைகள் மற்றும் சட்டங்களை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இது அவர்கள் மீது கூடுதல் கலவரங்களை உருவாக்கியதுடன் சில முஸ்லிம்கள் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்களின் சமுதாயத்தில் இது மேலும் அழிவுகளை ஏற்படுத்தியது. இது தவிர தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டனர்.
இதன் விளைவாக அவர்களின் சமூக வாழ்க்கை மற்றும் இஸ்லாமிய ஆன்மிக முறைகளில் தடைகள் உருவானது இந்த தாக்குதலின் காரணமாக, இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு வகையான தனிமைப்படுத்தலையும் அவமானங்களையும் அனுபவித்தனர்.
ஆனாலும் அப்போது ஐந்து பேர் கொண்ட ஆணைக் குழுவை உருவாக்கிய போதும் அறிக்கைகளில் திருப்தியில்லாமல் அப்படியே தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் பழிவாங்கப்பட்டது. இதன் மூலமாக, இலங்கையில் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக சமூக மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் அதிகரித்து, அவர்கள் தங்களது அடிப்படை மனித உரிமைகளைக் கடந்து ஒரு பரபரப்பான சூழ்நிலையில் விழுந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |