தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப அலுவலரின் அபார சாதனை!
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பணியாற்றி வரும் சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப அலுவலர் எஸ்.எம்.எம். ஜிஃப்ரி, "பீம் வளைவளவு அளவீட்டு கருவி" (Deflection of Beam Apparatus) ஒன்றை உருவாக்கியுள்ளார்.
நேற்று (15), பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் சிவில் பொறியியல் துறைக்கு விஜயம் செய்து, கருவியின் செயல்பாட்டை நேரில் பார்வையிட்டார்.
சந்தையில் சுமார் ரூ. 3 மில்லியன் பெறுமதி கொண்ட இந்த உபகரணத்தை, பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு வளங்களையும் தனிப்பட்ட அறிவு திறனையும் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அபார சாதனை
கருவியின் துல்லியமான செயல்திறன் மற்றும் வடிவமைப்பின் புதுமைத்தன்மையை அவர் பாராட்டி, ஜிஃப்ரிக்கு பாராட்டுச் சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார்.
“பல்கலைக்கழக தொழில்நுட்ப அலுவலர்களின் படைப்பாற்றல் மற்றும் திறமைகள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் மிகுந்த பங்கு வகிக்கின்றன. எதிர்காலத்திலும் இதுபோன்ற முயற்சிகளுக்கு பல்கலைக்கழகம் முழு ஆதரவை வழங்கும்,” என்று உபவேந்தர் உறுதியளித்தார்.
புதிய கருவி, கட்டமைப்பு பொறியியல் (Structural Engineering) பாடங்களுக்கு உட்பட்ட ஆய்வகப் பயிற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும்.
அதேவேளை, மாணவர்கள் பீம்களின் வளைவளவை நேரடியாக அளந்து, கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைத்து கற்றுக்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிநுட்பம்
இதன் மூலம் மாணவர்களின் செயல்முறை அறிவும் ஆராய்ச்சி திறனும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில், பொறியியல் பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ.ஹலீம், பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், திணைக்கள தலைவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும் இந்த சாதனை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தும் மைல்கல் சாதனையாகவும், நாட்டின் உயர் கல்வித் துறையில் புதிய ஊக்கமாகவும் அமைகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



