அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை
அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த பகுதிக்கு சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் அவதானம் செலுத்தி வருவதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.
அலைச்சறுக்கு நடவடிக்கை
அறுகம்பை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்த பிரதேசத்திலும் இவ்வாறான விபத்து இடம்பெற்றதாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அமெரிக்கா தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.
குறித்த பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் காணப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பிரஜைகள் இந்த பகுதியில் ஏதேனும் நெருக்கடிகளை சந்தித்தால் உடனடியாக 119 மூலம் உள்ளூர் அதிகாரிகளுக்கு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜைகள் விழிப்புணர்வு
பிரஜைகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும், பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிக்குச் செல்வோர் தகவல்தொடர்பு சாதனங்களை இலகுவில் பயன்படுத்தக் கூடிய வகையில் வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்குமாறும் பரிந்துரைக்கப்படுகிறது.
மறு அறிவித்தல்
எனவே, மறு அறிவித்தல் வரையில் அமெரிக்க பிரஜைகள் அறுகம்பை கடற்பரப்பினை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |