கெலிஓயாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பில் வெளியான தகவல்
கம்பளை(Gampola) - தவுலகல பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை வானில் கடத்தப்பட்ட தவுலகல வர்த்தகரின் 19 வயதுடைய மகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அம்பாறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவியும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
தனியார் உயர்நிலைப் பள்ளி வகுப்பில் கலந்துகொள்வதற்காக தோழி ஒருவருடன் தவுலகலவுக்குச் சென்று கொண்டிருந்த போது, நேற்று முன்தினம் காலை 7.15 மணியளவில் கறுப்பு நிற வானில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டார்.
அந்த பகுதியின் ஊடாக பயணித்த மற்றுமொருவர் இதனை அவதானித்து உடனடியாக குறித்த மாணவியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், காப்பாற்றச் சென்ற நபரையும் அதே வாகனத்தில் கடத்திச் சென்றமை காணொளியின் ஊடாக தெரியவந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாணவியை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வான் பொலன்னறுவையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், வானின் சாரதி கம்பளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், இந்த கடத்தல் சம்பவத்தின் போது, அவர் தனது காதலனால் கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் விசாரணையில் அவரை திருமணம் செய்து கொள்ள எதிர்பார்த்திருந்த அவரது மைத்துனரே கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த மாணவியுடனான திருமணத்திற்கு மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றதாகவும், கப்பம் பெற முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து, மாணவியை கண்டுபிடித்து சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இதன்படி, மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் விளைவாக கடத்தியதாகக் கூறப்படும் மாணவியும், கடத்தலில் ஈடுபட்ட குறித்த சந்கேதநபரும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கல்குடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இவர்கள் இருவரும் தங்கியிருந்ததாகவும் பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
காப்பாற்றிய நபர் மீதான தாக்குதல்
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குறித்த மாணவி எவ்வித ஆட்சேபனையும் இன்றி சந்தேகநபருடன் சென்றுள்ளமை குறித்த விடுதியின் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடத்தலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது குறித்த மாணவி எவ்வித எதிர்ப்பும் காட்டாது வானில் பயணித்ததாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்மீது கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாணவி கடத்தப்படும் சமயம் காப்பாற்றச் சென்ற நபரை இடையில் வைத்து வானில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், வானில் வைத்து கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் காப்பாற்றச் சென்ற நபரின் கையை கடித்ததாகவும், இதனால் கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இடையில் வானில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், மாணவியை காப்பாற்றும் முயற்சியின் போது தனது கண்ணுக்கு கீழ் காயம் எற்பட்டதாகவும் மாணவியை காப்பாற்றச் சென்ற நபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |