பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக வழங்கப்பட்ட அங்கீகாரம்
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணைக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (21) இடம்பெற்ற குறித்த கன்னியமர்வின் போது உப தவிசாளர் பாறூக் நஜீத் சமர்ப்பித்த பிரேரணைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையில், "1948 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத இஸ்ரேலிய அரசினால் பாலஸ்தீன மக்கள் தங்களது சொந்த நிலம், அடையாளம் மற்றும் சுயராஜ்யத்தை இழந்து, தொடர் துன்பங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
முன்வைக்கப்பட்ட பிரேரணை
ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக மாற்றப்பட்டு, பாலஸ்தீன தீவிர முறைகள், இடம்பெயர்வுகள் மற்றும் கட்டாயக் குடியேற்றங்களின் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் ஒழுக்கமின்றி மீறப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக, பாலஸ்தீனத்தில், குறிப்பாக காஸா மற்றும் வெஸ்ட் பாங்க் பகுதிகளில் இடம்பெறும் வன்முறை நடவடிக்கைகள் பல இலட்சம் மக்கள் மற்றும் சிறுவர்களின் உயிர்களை பறித்துள்ளன.
அப்பாவி மக்கள், சிறுவர்கள் பள்ளிகளில், மருத்துவமனைகளில், மற்றும் குடியிருப்புகளில் கூட பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது அனைத்தும் ஐ.நா.மனித உரிமைச் சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானவை. பொது மக்கள்,சிறுவர்கள் எந்தவொரு போரிலும் இலக்காகக் கருதப்படக் கூடாது.
அவர்களின் பாதுகாப்பு என்பது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
காசாவில் இடம்பெறும் போர்
சட்ட விரோத இஸ்ரேல் அரசின் தாக்குதல்களால் பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களின் நிலைமைகள் குறித்து இப்பிரதேச சபை ஆழ்ந்த கவலையுடன் தனது கருத்தை வெளியிடுகிறது.
எனவே, இப்பிரேரணை மூலம் இப்பிரதேச சபைக்கு நான்கு முன்மொழிவுகளை பாலஸ்தீன மக்களுக்கும் சிறுவர்களுக்கும் எமது முழுமையான ஆதரவை தெரிவித்துக் சமர்ப்பிக்கிறோம்.
1. பாலஸ்தீன மக்களுக்கும் சிறுவர்களுக்கும் எமது முழுமையான ஆதரவை
தெரிவித்துக் கொள்வதோடு, பாலஸ்தீன் நாட்டை சுதந்திர நாடாக அங்கீகரிக்க
வேண்டும் என்பதையும், இவர்களின் மனித உரிமைகள், நில உரிமைகள், பாதுகாப்பு
மற்றும் சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்டுள்ள நிலைமைக்கு நியாயமும் தீர்வும் தேவை. மனிதாபிமானமும் நீதியும் நிலைநிறுத்தப்படும் வரை, நாங்கள் ஒட்டுமொத்தமாக பாலஸ்தீன மக்களின் பக்கமாக இருக்கிறோம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
2. பாலஸ்தீனத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை வலியுறுத்தி சர்வதேச சமுதாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
உரிமை மீறல்கள்
3. சட்டவிரோத இஸ்ரேலிய அரசினால் ஈரானை நோக்கி மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு மட்டுமல்லாது உலக அமைதிக்கும் பெரும் சவாலாக உள்ளன. இந்தக் கடுமையான நடவடிக்கைகள், பிராந்திய போர்க்கலத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதுடன், அமைதிப் பேசுவார்த்தைகளை பாதிக்கின்றன.
இவ்வாறான உரிமை மீறல்களை வலியுறுத்தி சர்வதேச சமுதாயம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
4. இலங்கை அரசுக்கும் இந்த நிலையை மனிதாபிமான அடிப்படையில் மதித்து சரியான முடிவுகள் எடுக்க அரசியல் நெறிப்பாதை வகுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
"இந்த பிரேரணை, மனித உரிமையும், சமாதானமும் சார்ந்த நமது சபையின் உறுதியான குரலாகும்."இந்த பிரேரணை ஏகமனதாக சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுப்பினர் எஸ்.ஐ.எம்.ரியாஸ் பிரேரித்து உறுப்பினர் ஏ.பாயிஸ் ஆமோதித்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |