இலங்கையில் "பைத்துல்மால் நிதியம்" உருவாக்க கோரி தனிநபர் பிரேரணை முன்வைப்பு
இலங்கையில் "பைத்துல்மால் நிதியம்" ஒன்றை உருவாக்க அங்கீகாரம் வழங்குமாறு தனிநபர் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
குறித்த பிரேரணையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (MLM.Hizbullah) முன்வைத்தார்.
இன்றைய தினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரிலான நிதி அமைப்புகள், உலகம் முழுவதும் முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளிலும் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.
பைத்துல்மால் நிதியம்
ஆனால், இலங்கையில் முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இத்தகைய எந்தவொரு நிதியும் தற்போது இல்லை. இது உருவாக்கப்படுமாயின், இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் கல்வி, கலாச்சாரம், தொழில் மற்றும் சமூக ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகளை எளிதில் கையாள முடியும்.
மேலும், இந்த நிதி வெளிநாடுகளிலிருந்து உதவித்தொகைகளை பெறுவதற்கும் வழிவகுக்கும்."
"இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் ஒரு அதிகாரப்பூர்வ நிதி அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இதற்கான நிதி ஆதரவை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத்தர நான் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பா.56/2025 என்ற இலக்கத்துடன் நாடாளுமன்ற விசேட ஒழுங்கு பத்திரமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இப்பிரேரணைக்கு, இன, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |