கிண்ணியாவில் அழுகிய இளநீர் விற்பனை.. அதிரடியாக களமிறங்கிய சுகாதார பிரிவினர்
கிண்ணியாவில் அழுகிய இளநீரை விற்பனை செய்த நபருக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில், அமைந்துள்ள இளநீர் விற்பனை செய்யப்பட்ட, பழக்கடை ஒன்றில் சுகாதார அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அழுகிய இளநீர் விற்பனை
கடை உரிமையாளர் புதிய இளநீர்களை வெளியே காட்சிக்கு வைத்துவிட்டு, பழுதடைந்த இளநீர்களை வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்தமை சோதனையின் போது தெரியவந்துள்ளது.
இன்றைய தினம் நுகர்வோர் ஒருவர், வாங்கிய இளநீர் பழுதாகியிருந்ததையடுத்து, அவர் கடை உரிமையாளரிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு உரிமையாளரின் பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், குறித்த நுகர்வோர் உடனடியாக கிண்ணியா சுகாதார அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கிண்ணியா சுகாதாரப் பிரிவினர் அடங்கிய குழு ஒன்று, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குறித்த கடையில் சோதனை நடத்தியது.
சட்டவிரோத செயல்
சோதனையின் போது, பாவனைக்கு உதவாத ஏராளமான இளநீர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வர்த்தகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இவ்வாறான செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என கிண்ணியா பிரதேச சுகாதார அதிகாரி ஏ.எம். அஜித் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |