அரசியல் தலையீட்டுடன் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்கள் : கோஷல விக்ரமசிங்க
இலங்கையிலிருந்து இஸ்ரேல் நாட்டிற்கு தொழிலுக்காக அனுப்படும் போது பாரிய அரசியல் தலையீடு இடம்பெற்றுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று( 30) பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உரையாற்றுகையில், இதன் மூலம் அதிகளவான அதிகாரிகள் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர். இப்படியான நடவடிக்கை எதிர்வரும் காலங்களில் நடைபெற இடமளிக்கப் போவதில்லை.
பயிலுனர்கள் தெரிவு
இஸ்ரேல் நாட்டுடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பி வருகின்றோம். ஆனால் கடந்த காலங்களில் இஸ்ரேலில் விவசாய துறைக்கு தொழிலாளர்களை அனுப்பும் போது பாரியளவில் அரசியல் தலையீடு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விவசாய தொழிலுக்கான தெரிவு, அந்த தொழில்சார் அனுபவம் மற்றும் அதுதொடர்பான அறிவு என்பன தொடர்பில் பரீட்சை நடத்தி அதில் வழங்கப்படும் புள்ளிகளுக்கமைவே இடம்பெறும்.
இருப்பினும் கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப அவர்கள் தொழிலாளர்களை தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். இவ்வாறு அனுப்பப்பட்டவர்களும் வேலை செய்ய முடியாமல் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அனுபவம் மற்றும் போதுமான விவசாய அறிவு இல்லாத காரணத்தினால் அவர்களால் தொழிலை முன்னெடுத்து செல்ல முடியவில்லை. இந்த தவறு தொடர்ந்து இடம்பெறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். இந்த வருடம் 3624 நபர்கள் தொழிலுக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்க விடயம்.
அரசியல் அதிகாரங்கள்
சில இடங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு அமைய, அவர்களுக்கு உத்தரவு வழங்கும் போது, அதனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது போன்று தான் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளது.
தற்போது இஸ்ரேலில் யுத்தம் இடம்பெற்று வருகின்ற போதிலும் நாட்டிலுள்ள மக்களின் வாழ்நிலை வழமை போன்றே காணப்படுகின்றது.
இதனால் இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான தொழிலாளர்கள் அனுப்பும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, முன்னர் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட துறைசார் பயிலுனர்களை அனுப்புவதற்கே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |