மாற்றத்திற்கான மாற்றீடு தேசிய மக்கள் சக்தி அல்ல : ஏ.எம். ஜெமீல்
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் தனித்துவமான அரசியல் என்ற போர்வையை துடைக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார்.
நேற்று (29) சாய்ந்தமருதில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிமுறைமை மாற்றம்
தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை எண்ணுவதையடுத்து நல்ல ஆட்சி முறைமை மாற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அதிகளவான மக்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்திருந்தனர்.
மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமானது சரியாக அமையவில்லை.
மேலும் பொருட்களின் விலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் தற்போது மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்த போதிலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு 100 ஆசனங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்புக்கள் இல்லை.
புத்திசாலித்தனமான தெரிவு
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியே நாடாளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறப்போகின்றது. இதில் எந்த மாற்றங்களுமில்லை.
மேலும் இப்போதைய இளைஞர் சமூகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவே அநுரவின் கட்சிக்கு ஈர்க்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக முஸ்லிம்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும், அநுரவும் அவரது தேசிய மக்கள் சக்தியும் வெறும் மாயைகள் மாத்திரமே இதனை காலம் உணர்த்தும்.
எமது மக்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலை, சமூகத்தை ஏமாற்றி வருகின்ற முஸ்லிம் கட்சிகளை கிழக்கு மாகாணத்தில் இருந்து முற்றாக துடைத்தெறிவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும்.
ஆனால் மாற்றத்திற்கான மாற்றீடு தேசிய மக்கள் சக்தியல்ல என்பதை எமது இளையோர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார முன்னேற்றம், தேசிய ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், ஊழல் ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி போன்ற அனைத்திற்கும் தீர்வு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் மாத்திரமே காணப்படுகின்றது.
அதில் போட்டியிடும் திறமையான வேட்பாளர்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றம் கிடைக்கும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |