ஜெனீவாவில் தோல்வியில் முடிந்த உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேச்சு வார்த்தை!

Geneva United States of America Ukraine World Russia
By Shalini Balachandran Feb 18, 2026 08:40 PM GMT

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர்நிறுத்தத்திற்கான முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியில் முடிந்துள்ளது.

நான்கு ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகின்றது.

இந்தநிலையில், இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே முறிந்த நிலையில், ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் மறுத்துள்ளது.

குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மட்டுமே சமரசம் செய்ய வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்துவது நியாயமற்றது என ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய தரப்புத் தலைவர் மெடின்ஸ்கி, விவாதங்கள் கடினமாக இருந்தாலும் ஆக்கபூர்வமாக இருந்ததாகவும் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

அபுதாபி பேச்சுவார்த்தையில் போர்க்கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஜெனீவா சந்திப்பு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பேச்சுவார்த்தை தோல்வியால் உக்ரைன் கடன் பத்திரங்களின் மதிப்பு சரிந்துள்ளதோடு, மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கும் நிலையில் பொருளாதார நெருக்கடியும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.