ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் - ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன், ஈரான் ஒழுக்கமாக நடந்து கொள்வது நல்லது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் இராணுவ இலக்குகள் மற்றும் ஈரானிய துறைமுகங்களின் மீதான அமெரிக்காவின் புதிய கடற்படை முற்றுகையை மீற முயன்ற கப்பல் ஒன்றின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்ததை அடுத்து இந்த மோதல் வெடித்துள்ளது.
இதேவேளை, உடன்படிக்கையால் தமக்கு எந்தப் பயனும் இல்லையெனில், அதனைப் பின்பற்ற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், "நான் காலக்கெடு விதிக்க விரும்பவில்லை, ஆனால் ஈரான் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
அவர்கள் எங்களுடன் உடன்படிக்கைக்கு வர விரும்புகிறார்களா அல்லது நாங்கள் இதனை முற்றாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமா என்பதைப் பார்ப்போம்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.