வெளிநாடுகளிலிருந்து இலங்கை தபால் திணைக்களத்திற்கு கிடைத்த பொதிகள் மாயம்
இலங்கை தபால் திணைக்களத்திற்கு கடந்த இரண்டு மாதங்களில் 60 இற்கும் அதிகமான பொதிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தற்போது அவை காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதிகள் ஸ்கேன் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், குறித்த பொதிகளை பெற்றுக்கொள்ள அழைப்புக்கள் விடுக்கப்பட்டும் உரிமையாளர்கள் வராமையின் காரணமாக பொதிகள் இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாயமான பொதிகள்
மேலும், திணைக்களத்திற்கு கொண்டு வரப்படும் பொதிகள் 30 நாட்களுக்குள் உரிமையாளர்களால் எடுக்கப்படவில்லை என்றால், பொதிகள் அனுப்பப்பட்ட அதே முகவரிக்கு திருப்பி அனுப்பப்படும்.
உள்ளடக்கத்தில் உள்ள பொருட்கள் இல்லை என்றால் அதனை திருப்பி அனுப்ப முடியாமல் போகும்.
எனினும், தற்போது பொதிகளிலுள்ள பொருட்கள் ஊழியர்கள் மூலம் தபால் திணைக்களத்திலிருந்து இரகசியமாக வெளியேற்றப்படுவதனால் அவற்றின் உரிமையாளர்கள் வருவதில்லை என திணைக்களத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த பொதிகள் அனைத்தும் EMS விரைவு சேவைகள் மூலம் விநியோகிப்பதற்கு பெறப்பட்டவை என தெரியவந்துள்ளது.
பொதிகளிலுள்ள பொருட்கள்
அத்துடன் கடந்த காலங்களில், இந்த சேவையின் மூலம் வழங்கப்பட்ட சில பொதிகளில் போதைப்பொருள்கள் கூட காணப்பட்டன.
இதன்படி, தற்போது காணப்படும் இந்த பொதிகளில் போதைப்பொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |