கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்
மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் தனது முதல் மாத சம்பளத்தை பொது தேவைகளுக்காக பயன்படுத்துமாறு வழங்கியுள்ளார்.
இது கடந்த வியாழக்கிழமை கல்குடா உலமா சபையிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் 2018ல் தனது உள்ளுராட்சி மன்ற அரசியல் பிரவேசத்தின் போது மக்களிடம் ஒரு உறுதி மொழியினை வழங்கியிருந்தார்.
மக்கள் பிரதிநிதி
இதன்படி, தான் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டால் அந்த பதவியால் கிடைக்கும் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள், வாகன சலுகை எதையும் தனக்கு என உபயோகிக்காது அவற்றை முழுமையாக மக்களின் தேவைக்காக வழங்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள அவர் தனது முதலாவது மாத சம்பளம் 54,285 ரூபாய், தொலைபேசி கட்டணம் 50,000 ரூபாய், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கட்டணம்120,000 என மொத்த கொடுப்பனவாக இரண்டு இலட்சத்து இருபத்து ஐயாயிரம் ரூபாய் (225,000) பணத்தினை கல்குடா உலமா சபையிடம் வழங்கி வைத்துள்ளார்.
கையளிக்கப்பட்ட பணம்
உலமா சபை கல்குடா கிளை அலுவலகத்தில் வைத்து உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையிலான குழுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நளீம் குறித்த நிதியை கையளித்துள்ளார்.
மேலும், இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏறாவூர் பிரதேச முக்கியஸ்தர்கள், உலமா சபையின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |