புத்தளத்தில் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள இஞ்சி பறிமுதல்
புத்தளம் - நுரைச்சோலை (Nuraicholai) சஞ்சீதாவத்தை பகுதியில் இருந்து 2,828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன், சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைதானது நேற்று (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடையவர் எனவும், இவர் நுரைச்சோலை பகுதியை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்திற்கு சொந்தமான நுரைச்சோலை கடற்படைப் பிரிவினர், நுரைச்சோலை பொலிஸாருடன் இணைந்து குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றை சோதனை செய்தனர்.
இதன்போது, குறித்த வீட்டுக்குள் 70 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 2,828 கிலோ கிராம் உலர்ந்த இஞ்சி கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி 45 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைதான சந்தேக நபர் கைது
குறித்த உலர்ந்த இஞ்சி விற்பனைக்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட 2,828 கிலோ கிராம் உலர்ந்த இஞ்சி உரமூடைகள் மற்றும் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |