சபையில் ரிஷாட் எம்.பி வெளிப்படுத்திய உண்மைகள்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்(Risad Badiudeen) வலியுறுத்தியுள்ளார்.
நேற்று(08) இடம்பெற்ற குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“இன்று ஒரு முக்கியமான சட்டமூலத்தை கொண்டுவந்திருக்கிறீர்கள். அதற்கு நாங்களும் ஆதரவளிக்கின்றோம்.
மக்களின் ஆதரவு
இது நாட்டுக்குத் தேவையானதொரு சட்டமூலம். எனவே, அதற்காக நன்றி கூறுகின்றோம். ஆனால், ஒரு சில விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றேன்.
இந்த அரசாங்கம் அதிகமான மக்களுடைய ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம். சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நீங்கள், பெரிய எதிர்பார்ப்புகளை மக்களுக்கு வழங்கிவிட்டு வந்திருக்கிறீர்கள்.
எனவே, நீங்கள் கூறிய விடயங்களை நிறைவேற்றுகிறீர்களா? என்று மக்கள் உங்களை உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கடந்த காலங்களில் பிமல் ரத்நாயக்க போன்றவர்கள், இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக, பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.
நட்புறவு சங்கத்தின் தலைவராகவும் பிமல் ரத்நாயக்கதான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கின்றேன். இருந்தபோதிலும், அண்மையில், ருஷ்தி என்ற நபரை கைது செய்தமை ஒரு பெரிய பேசுபொருளாக மாறியது.
இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ஸ்டிக்கரை ஒட்டினார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டது தவறல்ல, அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதவானுடைய உத்தரவின் பேரில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால், அந்த விடயம் தவறாகப் பேசப்பட்டிருக்கமாட்டாது.
யங்கரவாத தடை சட்டம்
ஆனால், பயங்கரவாத தடை சட்டத்துக்கு (PTA) கீழ் அவரைக் கைது செய்தமையை, பொலிஸாரின் ஒரு கேவலமான செயலாகவே நான் பார்க்கிறேன்.
இது இந்த அரசாங்கத்துக்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை, எதிர்காலத்தில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பொலிஸாரும் யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இதனை செய்தார்களோ தெரியவில்லை. எனவே, அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.
கடந்த காலங்களில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க PTA வுக்கு எதிராக அதிகமாக பேசிய ஒருவர். இந்த PTA சட்டத்தினூடாக அநியாயமாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
இலங்கை வரலாற்றில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் PTA வுக்கு கீழ் கைது செய்யப்பட்டார் என்றால், அது நானாக மாத்திரம்தான் இருப்பேன். இன்று நான் நிரபராதி.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு எனக்கு சம்பந்தம் இல்லை என்று நீதிமன்றத்தால் சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளேன்.
அதேபோன்று, ஆசாத் சாலி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜெஸீம், ராசிக் உள்ளிட்ட இன்னும் பல சகோதரர்களை, PTA வினூடாக அநியாயமாக கைது செய்தனர்.
ஈஸ்டர் தாக்குதலை யாரோ செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக அநியாயமாக PTA சட்டத்தை பயன்படுத்தினர். இன்றும் கூட, இதற்கு முன்னர் PTAவுக்கு கீழ் கைது செய்யப்பட்ட எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள், உலமாக்கள், கல்விமான்கள் ஆகியோர் 4, 5 வருடகாலமாக சிறையில் வாடுகின்றனர்.
அநியாயமான கைது
அவர்களது பிள்ளைகள் இன்று பிச்சை எடுக்கின்றனர். நேற்று ஒரு தாய் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, “நான் பிச்சை எடுத்து என் பிள்ளைகளை வளர்க்கின்றேன்” என்று கூறினார்.
எனவே, இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஈஸ்டர் குண்டு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
ஆகையால், தயவுசெய்து நீதி அமைச்சர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, அநியாயமாக சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றவர்களை, அவசரமாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.
மேலும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கு, அவர் ஒரு பிரபலமான சட்டத்தரணி. இன்னும் அவரது வழக்கு முடித்து வைக்கப்படவில்லை.
அதேபோன்று, ஐந்து வருடங்களுக்கு முன்னர், நான் புத்தளத்திலிருந்து அகதி மக்களை வாக்களிப்பதற்காக அழைத்துச் சென்றேன் என்ற வழக்கில், என்னை தேடி அலைந்தனர்.
எனக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிலரை அநியாயமாகக் கைது செய்தனர். என்னை நிரபராதி என்று நீதிமன்றம் விடுவித்த போதும், எனக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களின் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது.
ஐந்து வருடங்களாக அவர்கள் நீதிமன்றம் ஏறி இறங்குகின்றனர். அவர்கள் என்னை ஒழித்துவைக்கவும் இல்லை, அவர்கள் அதற்கு சம்பந்தமும் இல்லை. அவ்வாறு இருக்கும்பட்சத்தில், அந்த வழக்கு இன்னும் முடித்துவைக்கப்படாமல் இழுவை நிலையே காணப்படுகின்றது.
எனவே, சட்டமா அதிபர் திணைக்களம், இவ்வாறான வழக்குகளை கிடப்பிலே போடாமல், இழுபறி நிலையை மாற்றி, அவசரமாக அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இஸ்ரேலியர் வருகை
அதேபோன்று, இஸ்ரேலியர்களின் இலங்கைக்கான வருகையை நீங்கள் சாதாரணமாக நினைக்காதீர்கள். இவ்வாறுதான் பாலஸ்தீனத்திற்குள்ளும் இஸ்ரேலியர்கள் புகுந்து, இன்று பாலஸ்தீனம் அழிந்துகொண்டிருக்கின்றது. அந்த மக்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் பச்சிளம் குழந்தைகள் பலியாகின்றன. ஐ.நா சபை கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவினதும் நெதன்யாகுவினதும் அடாவடித்தனத்தை கேட்பார் பார்ப்பார் யாருமில்லாத ஒரு துர்பாக்கிய நிலையில், அந்த நாடு இருக்கின்றது.
அந்த மக்கள் துன்பப்படுகின்ற போது, இஸ்ரேலியர்கள் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வந்து, இங்குள்ள பிரதேசங்களை ஆக்கிரமிக்கின்றனர்.
வெளிகமையில் ஒரு மதஸ்தாபனம், கொழும்பில் ஒரு மதஸ்தாபனம் உட்பட சொத்துக்களையும் வாங்குகின்றனர். சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி, இந்த நாட்டை சுடுகாடாக மாற்றி, ஒரு மோசமான பொருளாதார நிலைக்கு தள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
எனவே, தயவுசெய்து இஸ்ரேலியர்களின் வருகையை இலேசாகக் கருதிவிடாதீர்கள். அவர்களுக்காக இங்குள்ள மக்களை தண்டிக்காதீர்கள்.
இஸ்ரேலியர்களை பாதுகாப்பது என்பது, நமது நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு நீங்கள் இடும் அடித்தளம் என்பதை மனதிற்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |