47ஆவது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்கவுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாகவும் இரண்டாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) இன்று (20) பதவியேற்கவுள்ளார்.
இலங்கை நேரப்படி அவர் இன்று இரவு 10.30க்கு தனது கடமைகளை ஏற்கவுள்ளார்.
மேலும், இந்த பதவியேற்பின் போது பல முக்கிய நிர்வாக ஆவணங்களில் அவர் கைச்சாத்திடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வழமையான பதவியேற்பு
அமெரிக்க ஜனாதிபதிகள் வொஷிங்டனில் உள்ள கேபிடல் கட்டிடத்திற்கு வெளியே பதவியேற்பது வழமை. ஆனால் வொஷிங்டன் தலைநகரை தாக்கியுள்ள கடுமையான குளிர்கால வானிலை காரணமாக, பதவியேற்பு விழாவை கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி பதவியேற்பிற்காக அமெரிக்காவின் தலைநகர் உள்ளிட்ட பல நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான குளிர்கால வானிலை காரணமாக, கலந்துகொள்ளும் அனைவரின் பாதுகாப்பிற்காக பதவியேற்பு விழா மண்டபத்தில் நடைபெறும் என்று டிரம்ப் தனது சமூக ஊடக கணக்குகளில் அறிவித்துள்ளார்.
முன்னதாக 1985 இல் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் பதவியேற்பு இதேபால இடம்பெற்ற வரலாற்றை கொண்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், பைபிளை கை வைத்து சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அமெரிக்க தலைநகரில் வைத்து தமது கட்சி ஆதரவாளர்களிடம் நேற்று அவர் உரையாற்றியுள்ளார்.
மேலும், குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அவரது உருவம் மற்றும் பெயர் பதிக்கப்பெற்ற ஆடைகள், பாதணிகள் மற்றும் ஆபரணங்களை அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால் ட்ரம்ப் 49.9 சதவீத வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 48.4 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |