அம்பாறை மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கை
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (20) காலை 8 மணியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
அத்தோடு, இந்த மாவட்டத்தின் வாக்கெண்ணும் நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த தேர்தல் மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்களில் 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்கள்
அதன்படி அம்பாறை தொகுதியில் 188,222 பேர், சம்மாந்துறை தொகுதியில் 99,727 பேர், கல்முனை தொகுதியில் 82,830 பேர், பொத்துவில் தொகுதியில் 184,653 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறையில் 184 வாக்களிப்பு நிலையங்கள், சம்மாந்துறையில் 93 வாக்களிப்பு நிலையங்கள், கல்முனையில் 74 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் பொத்துவில் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |