தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல – முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் நேற்று (03.09.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்தியகுழு கூட்டம்
மேலும் குறிப்பிடுகையில், ”எமது மக்கள் பொது வேட்பாளர் தொடர்பில் அவரை நூறுவீதம் ஆதரிக்க வேண்டும் என்ற செயற்பாட்டில் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் எமது கட்சி அங்கத்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஏன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என்பதை கட்சி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.
கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் அதிகளவானோர் பங்கு பற்றியிருக்க வேண்டும். அக்குழுவில் 43 பேர் உறுப்பினராக உள்ளனர் அன்றையத்தினம் கூட்டத்தில் 23 பேர் மாத்திரமே பங்கு பற்றியிருந்தனர் அதிலும் 19 உறுப்பினர்கள்தான் அவர்களது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
சிங்கள வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பரிசீலனை செய்து தமிழ் மக்களுக்கான சார்பு விடயங்கள் எங்கு காணப்படுகின்றதோ, அதனடிப்படையில் மக்களை வாக்களிக்கத் தூண்டலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார்.
தமிழர்களுக்கான உரிமைகள்
எமது கட்சிக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இருக்கின்றதா? அவ்வாறெனில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன? அதில் தமிழர்களுக்கான உரிமைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா என்பதை மத்திய குழுவில் தீர்மானம் மேற்கொண்டவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.
இது சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் ஒரு வியூகமாகவும் இருக்கலாம். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க தந்திரத்தில் சாத்தியவான் அவர் இவ்வாறான திட்டத்தை வகித்திருக்கலாம். அதற்கு இவர்களும் துணைபோயிருக்கலாம் என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது.
ஏனெனில் சஜித் பிரேமதாசவுக்கு என்ன காரணத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்கள் இற்றைவரையில் யாரும் எந்த ஊடகத்திலும் சொல்லவில்லை.
எது எவ்வாறு அமைந்தாலும் எமது கட்சியைச் சேர்ந்த இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் பா.அரியநேத்திரனுக்கு சங்கு சின்னத்திற்கு மக்கள் அனைவரும் இம்முறை வாக்களித்து தமிழ் மக்களின் ஒன்றுமையை நிருபிக்க வேண்டும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |