மின்சார சபை ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இல்லை : வெளியான பின்புலம்
இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தற்சமயம் அவ்வாறான கொடுப்பனவை இந்த வருடம் அங்கீகரிக்கவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் இந்த வருடம் கொடுப்பனவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே மேற்கண்டவாறு, மின்சார சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத கொடுப்பனவு
இது தொடர்பாக ரஞ்சன் ஜெயலால் தெரிவித்ததாவது,
இதற்கு முன்னதாக, தான் அரசாங்கத்துடன் இணைந்த தொழிற்சங்கத்தை வழிநடத்தியுள்ளேன். எனவே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு மேலதிக கொடுப்பனவு பெற வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தத் தேவையில்லை.
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை தனது ஊழியர்களுக்கான எந்தவொரு மேலதிக கொடுப்பனவையும் இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை.
அடுத்த வருடத்தின் முதல் பாதியில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் இலங்கை மின்சார சபை நிராகரித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரசபையின் பதில்..
இவ்வருடம் பாரிய இலாபத்தை ஈட்டிய போதிலும், கடன் மீளச் செலுத்துவதற்கும் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ள நிலையில், ஊழியர் மேலதிக கொடுப்பனவை டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைத் தலைவரிடம் இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அண்மையில் கோரிக்கை முன்வைத்திருந்தது.
இந்நிலையில் மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதில்லை என மின்சார சபை ஏற்கனவே இறுதி தீர்மானம் எடுத்துள்ளதாக சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடன் தீர்த்த இலாபம்
மேலும், இலங்கை மின்சார சபை இவ்வருடம் பாரிய இலாபத்தை ஈட்டிய போதிலும் பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடனை திருப்பி செலுத்துவதற்காக 112 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
அத்துடன் இந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, அடுத்த வருடம் அதிகரிக்கக் கூடிய ஒரு பில்லியன் மின்சார அலகுகளின் கூடுதல் தேவையை பூர்த்தி செய்வதற்கு குறைந்த செலவில் எரிசக்தி ஆதாரங்கள் இல்லாததே இதற்கு காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும் இக்குறைபாட்டுக்கான ஒரே மாற்று வழி, காற்று மற்றும் சூரிய சக்தியுடன் ஒரு மேலதிக எரிபொருளாக (திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவை (LNG) பயன்படுத்துவதே ஆகுமென அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |