பாவங்களை மொத்தமாக விட ஆசையா...?
பாவத்தின் நிலைமையை விட்டும் ஒரு மனிதன் திரும்ப வேண்டுமாயின் அவன் மரணத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : ஒவ்வொரு மனிதனும் மரணமடைந்தால் சொல்லுவான் 'யா அல்லாஹ்! என்னை திருப்பி அனுப்பு நான் விட்டுவந்த அமல்களை செய்து வருகின்றேன் என்று'. ஆனால் அந்த வார்த்தைகள் வெறும் பேச்சு தான். அல்லாஹ் அந்த மனிதனுக்கும் இந்த உலகத்திற்கும் இடையே கப்ரின் வாழ்க்கையை வைத்திருக்கின்றான்.
அதிலிருந்து மீண்டுவிட முடியாது. இதை எண்ணிப்பார்த்து நல்லமல்களை செய்தால், உதாரணமாக ஒருவன் இஷா தொழுகையை விட்டுவிட்டு உறங்கச்சென்றால்..அவனின் உள்ளம் கூறும், தொழாமல் உறங்கச் சென்றால் காலை விடியும் முதல் அல்லது காலை தொழுகைக்காக நீ எழாமல் மரணித்தால் என்ன செய்வாய்?
நிச்சயமான மரணம்..
அதே போல் காலை பஜ்ர் தொழுகைக்காக எழாமல் சூரியன் உதித்தால்? அதே நேரம் அல்லாஹ் உன் உயிரை பறித்தால் உன் நிலைமை என்ன? என்று கேட்கும்.
அவன் அதை மனதில் எடுத்துக்கொண்டு நன்மையின் பக்கம் விரைந்தால், மரணத்தை நினைவு கூர்ந்து பாவத்திலிருந்து விடுபடுவான்.
பாவத்தை நினைவு கூறக்கூடிய அந்த அடியான் தன் மரணத்தின் முடிவை எண்ணிப்பார்க்க வேண்டும்.ஒவ்வொருவரும் கட்டாயம் நினைவு கூற வேண்டும் எந்த நிலையில் நான் மரணமடைவேன் என்று.
ரஸூலுல்லாஹ் கூறினார்கள் : மனிதன் எந்த நிலையில் மரணிக்கிறானோ அதே நிலையில் தான் மறுமையில் எழுப்பப்படுவான்.
மேலும் தொழுகையை விட்டவர்கள் நாளை மறுமையில் காரூனோடும், பிர்அவுனோடும், உபை இப்னு கலப்போடு எழுப்பப்படுவார்கள்.
மனிதனுடைய உள்ளத்தை அல்லாஹ் தனது இருவிரல்களுக்கு இடையில் வைத்துள்ளான். அவன் எப்படி நாடுகிறானோ அப்படி மாற்றுவான்.
அமல்களின் அளவு..
அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் : ஒருவன் நன்மையின் அமல்களை செய்து கொண்டே இருக்கின்றான். அவனுக்கு அந்த நன்மையின் காரணமாக சுவர்க்கத்தை அடைவதற்கும் இடையிலே ஒரு ஜான் தான் இடைவேளை இருக்கின்றது.
இன்னும் ஒரு ஜான் தான் நன்மை செய்தால் சுவர்க்கம் சென்று விடலாம் என்று சொல்லுவான் இந்த நேரத்தில் அந்த அடியான் அவனது விதி முந்திய காரணத்தினால் பாவம் செய்வான் நரகத்திலே நுழைந்து விடுவான்.
அதேபோல ஒரு அடியான் பாவங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பான். அவனுக்கும் நரகத்தை அடைவதற்கு இடையிலே ஒரு ஜான் அந்த அளவு தான் இடமிருக்கும் அந்த அமலை செய்தால் நரகத்தினுள் நுழைந்து விடுவான் அவனது விதி முந்தும் நன்மைகளை செய்வான் சுவர்க்கத்தினுள் நுழைவான்.
அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் நல்ல அமல்களை செய்யக்கூடிய பாக்கியத்தை கொடுப்பான். அந்த நல்லமல்கள் செய்யக்கூடிய நிலையிலேயே அவர்களின் உயிரை கைப்பற்றுவான்.
என் மரணத்தை நல்ல அமல்கள் செய்த நிலையிலேயே கைப்பற்றி விடு என்று கேட்கக்கூடிய மனிதர்கள் தற்காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் காணப்படுகின்றார்கள் என்பது வேதனை தரக்கூடிய ஒன்று தான்.
ஜனாஸாவுடன் தொடர்பு கொள்ளல்
உயிர் பறிக்கப்பட்ட வெறும் உடல்களாக இருக்க கூடிய ஜனாஸாக்களை கழுவுதல். ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல். ஜனாஸாவை சுமந்து செல்லுதல். எங்கு இதெல்லாம் நடக்கின்றதோ அங்கு தொடர்ச்சியாக பயணம் செய்தல் என்பனவும் பாவத்தை விட்டும் அனைவரையும் பாதுகாக்கும்.
உள்ளம் இறுகி இருக்கின்றது. தற்போது நான் என்ன செய்ய வேண்டும் என ரஸூலுல்லாஹ்விடம் வினவப்பட்ட போது அவர்கள் கூறினார்கள் “ஜனாஸாவை குளிபாட்டுங்கள், அதன் நிலைமை பாருங்கள்! உங்கள் உடல் அவ்வாறு இருக்கும் நிலையை எண்ணி அஞ்சிக் கொள்ளுங்கள்!”
ஆகவே மரணத்தை நினைவு கொள்ளுங்கள் அதுவே உங்களை பாவத்தை விட்டும் தடுத்துவிடும்.
அத்துடன் கப்ர்களை ஸியாரத் செய்யுங்கள் உங்களுக்கும் இந்த கப்ர் ஒரு நாள் நிச்சயம் உண்டு என்பதை அஞ்சிக்கொள்ளுங்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |