இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர தெரிவு
புதிய இணைப்பு
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க அதி கூடிய வாக்குகளை பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நாளை (23) காலை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
அநுர வெற்றி
ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை.
எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன. இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட வாக்குகள் அதிகமாக பெற்று அநுர குமார திஸாநாயக வெற்றிபெற்றுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அத்தோடு, வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம் இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது.
அத்துடன் வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும்.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
முதலாம் இணைப்பு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதி முடிவுகள் இன்று (22) மாலைக்குள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவுகள்
முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார் என்பது தொடர்பில், நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |