அக்கரைப்பற்றில் இளைஞர் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிக்கி பலி
அக்கறைப்பற்றில்(Akkaraipattu) வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச்சம்பவம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞன் கண்ணகி கிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணை
இந்நிலையில், குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை, இவர் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார்.
அத்தோடு, உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்ரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
நேற்று (22) சில ஏக்கர் வயல் நிலங்களை உழுதுவிட்டு பின்னர் உழவு இயந்திரத்தில் நண்பர் உழுது கொண்டிருக்கும் போது அருகில் இருந்த அவர், தவறி வீழ்ந்து வயலை இரட்டிப்பாக்கும் கலப்பைக்குள் அகப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |