பெண் மருத்துவர் மீதான அத்துமீறல் : ஊடகத்துறை அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெண் மருத்துவர் மீதான அத்துமீறல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மருத்துவரின் தனியுரிமையை மதிக்குமாறு அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களையும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
இன்று (11) ஒரு அறிக்கையில், ஊடகங்கள் அவரது அடையாளத்தை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்தும் இதுபோன்ற வழக்குகளைப் புகாரளிப்பதில் உணர்திறன் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்
திங்கட்கிழமை(10) இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் நாடளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், வைத்தியர் கடமை அறைக்குள் வைத்தியரை தாக்குவதற்கு முன்னர் கத்தியைக் காட்டி அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அவரை பிடிக்க 5 பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால், விரைவான நீதி கோரி மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இன்று இடம்பெறும் நாடாளுமன்ற குழு விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்த விவகாரத்தை எழுப்பி, அரச சேவையாளர்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை மற்றும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |