திருகோணமலை முத்துநகரில் சட்டவிரோத மண் அகழ்வு தற்காலிகமாக நிறுத்தம்
திருகோணமலை (Trincomalee) பட்டினமும் சூழலும் பிரதேச செயல பிரிவில் உள்ள முத்துநகர் பகுதியின் விவசாய நிலம் அண்மையில் தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் சட்ட விரோத கிரவல் மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திர அந்த பகுதிக்கு நேற்று (18) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், புவிச் சரிதவியல் சுரங்கப் பணியக அதிகாரிகள், இலங்கை துறை முக அதிகார சபை அதிகாரிகள், விவசாய துறை சார் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உயரதிகாரி என பலரும் கலந்து கொண்ட நிலையில் மண் அகழ்வை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.
மண் அகழ்வு
இதன்போது பிரதியமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இப்பகுதியில் அண்மையில் சட்ட விரோதமாக மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவித்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.
பல வருடங்களாக இம்மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனடிப்படையில், மக்களுக்கு விவசாயம் செய்வதற்கான உரிமையும் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுத்த தீர்மானங்களின் பிரகாரம், நிறுவனங்கள் வேலைத் திட்டங்களை ஆரம்பிக்காத பிரதேசங்களில் விவசாய செய்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரைகளை விடுத்திருந்தோம்.
உரிய நடவடிக்கை
தற்போது சரியான முறையில் ஆராய்ந்து பிரதேச செயலாளர் மூலமாக வேண்டுகோளை விடுக்கின்றோம்.
மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் இங்கிருக்கின்ற பல்வேறுபட்ட சட்டச்சிக்கல்களாகவோ அடிப்படை உரிமைகளாகவோ இருக்கலாம் இதனை சரியான வகையில் ஆராய்ந்து பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது.
அதனை மையப்படுத்தி உறுதியாக இருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |