இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜூலை 15 ஆம் திகதி வரையில் 1,095,675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, இந்த நிலைமை தொடர்ந்தும் பேணப்பட்டால் போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலை பதிவான 2018ஆம் ஆண்டை விடவும் நல்ல நிலையை அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை ஜனாதிபதி ஊடக மையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டில் சுற்றுலாத் துறை திருப்திகரமான நிலையில் இல்லை.
குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல், கோவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி ஆகியவை சுற்றுலாத் துறையை வீழ்ச்சியடையச் செய்தன.
ஆனால் சுற்றுலா அமைச்சும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் இணைந்து முன்னெடுத்த திட்டத்தின் மூலம் தற்போது வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்கின்றன.
அதன்படி, 2022ஆம் ஆண்டில் 719,978 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2023 ஆம் ஆண்டில் 1,487,303 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
2024 ஜூலை 15ஆம் திகதிக்குள், இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,095,675 ஆக பதிவாகியுள்ளது.
இதன்படி, கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என ஊகிக்க முடிகிறது.
போருக்குப் பிறகு, 2018 இல் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தந்திருந்தனர். அந்த ஆண்டில் 2,333,796 பேர் இலங்கைக்கு வந்தனர். அப்போதைய சுற்றுலா வர்த்தக வருமானம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்ந்தால், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்த நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும், அதிலிருந்து வரும் வருமானத்தையும் 2018 ஆம் ஆண்டை விட அதிகரித்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |