கல்முனையில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை
ரமழான் மாதத்தை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள் மீது திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நேற்று (25) மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இதில் பழக்கடைகள், உணவகங்கள், வெதுப்பகங்கள், வியாபார நிலையங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரமும் பாதுகாப்பும்
பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பௌசாத் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள குழுவினால் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவு பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன், பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
உணவகங்களின் தரத்தை மேம்படுத்துவதுடன், சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான உணவினை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










