விமான நிலையத்தில் தாக்கப்பட்ட இலங்கையர் - கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு
இலங்கையை சேர்ந்த நான்கு வர்த்தகர்கள் இந்திய விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்களிடம் விசாரணை என்ற போர்வையில் சுங்க அதிகாரிகள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு, துன்புறுத்தியதாக இலங்கையர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுங்க அதிகாரிகளினால் இலங்கையர்கள் மீது முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டு, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை பயணிகள்
இது தொடர்பாக விமான நிலையத்திலிருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானத்தில் சென்னை வந்திறங்கிய நான்கு பயணிகளை, துணை ஆணையாளர் சரவணன் தலைமையிலான சுங்கக் குழுவினரால் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளில் ஒருவரான சலீம், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் மொத்தமாக ஆடைகள் வாங்க சென்னைக்கு வரும் வர்த்தகர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அதிகாரிகளுடனான வாக்குவாதம் அதிகரித்ததால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நால்வர் அடங்கிய குழுவினரால் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி வீடியோ பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல்
“நாங்கள் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறோம். இங்குள்ள சுங்கத்துறை அதிகாரிகளால் நாங்கள் கடுமையாக தாக்கப்பட்டோம். இந்த வீடியோவை இலங்கை தூதரகத்திற்கு அனுப்புங்கள்” என்று இலங்கை பயணி ஒருவரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிலைமை மோசமடையும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கவே, அதிகாரிகள் பயணிகளை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது, பயணிகள் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தங்கள் பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி, பொலிஸாரிடம் சுங்க அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சென்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |