அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் அநுரவின் திட்டம் சாத்தியமாகலாம்..!
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துவிட்டு ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது முடியாது. சம்பளம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டு ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டால் அதுவே சாத்தியமானது என்று பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம்(Amirthalingam) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம், ஊழலை கடுமையாக எதிர்க்கும் ஒரு அரசாங்கமாக இருப்பதால், இவ்வாறு கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்கி ஊழலை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் போது அது சாத்தியமாகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வழமைக்கு மாறான வெற்றி..
தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் 159 ஆசனங்களைப் பெற முடியாது என்பது கடந்த காலங்களில் தெளிவாக தெரிந்த விடயம்.
ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற இந்த வெற்றி என்பது வழமைக்கு மாறான ஒன்று.
குறிப்பாக கடந்த கால ஆட்சிகளின் மீது இருந்த வெறுப்பை மக்கள் இதில் வெளிக்காட்டியிருக்கின்றார்கள்.
இதை உள்நாட்டு மக்கள் உட்பட வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.
பலமான அரசாங்கம்
பலமான ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அமைத்துள்ள நிலையில், ஒரு ஊழலற்ற, வீண் விரயமற்ற மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இல்லாத ஒரு அரசாங்கமாக இது நகரப் போகின்றது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
குறிப்பாக அமைச்சர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், செலவுகளை கடுமையாக குறைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறான செலவுக் குறைப்புக்களைச் செய்வதன் மூலம் எங்களுடைய வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறைகளை குறைக்க முடியும்.
அதேசமயம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்கு சம்பளத்தை குறைவாகக் கொடுத்து ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது சாத்தியமில்லாதது.
சம்பளத்தை கணிசமாக அதிகரித்து அதன் பின்னர் ஊழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |