ஷைத்தான் இப்படியும் வழி கெடுப்பான்..! புர்சீஸாவின் கதை
ஒரு அடியானின் மீது அல்லாஹ் அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கிறான் என்பதற்கு மிக முக்கியமான அடையாளம் அல்லாஹ் அந்த அடியானை பாவங்கள் செய்ய விடாமல் தடுப்பதாகும்.
இது தான் அந்த அடியான் மீது அல்லாஹ் உண்மையான அன்பை வைத்திருக்கின்றான் என்பதற்கான ஒரு வெளிப்பாடு ஆகும்.
இந்த உலகவாழ்வில் முஃமீன்களை அல்லாஹ் சோதிப்பான் அதற்காக பல சோதனைகளை இந்த உலகத்திலே வைத்திருக்கின்றான். இதனடிப்படையில் முஹம்மது ரஸூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறிய சோதனை ‘எனக்குப் பிறகு எனது சமூகத்தின் ஆண்களை வழிகெடுப்பதற்கு எதையும் விட்டுச்செல்லவில்லை. பெண்களை தவிர' என்று கூறினார்கள்.
இப்படி முன்னைய காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் பெண்ணால் சோதிக்கப்பட்டு அவரை அந்த சோதனை எவ்வளவு தூரம் கொண்டு சென்றது என்பதை பற்றி ஆராய வேண்டிய கட்டாயத்திலுள்ளோம்.
சோதிக்கப்பட்ட புர்சீஸா
முன்னைய காலத்தில் புர்சீஸா என்ற வணக்கசாலி இருந்தார். ஊர்வாசிகள் எல்லாம் புர்சீஸாவை அல்லாஹ்வை வணங்கக்கூடிய வணக்கசாலியாக அடியாராக கருதினார்கள்.
அவரும் அப்படி தான் சதா நேரமும் தனிமையில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்கிக்கொண்டு இருப்பார்.
ஷைத்தான் இவரை சோதிக்க நாடினான்...அந்த ஊரிலே மூன்று சகோதரர்கள் வசித்தார்கள். அந்த மூன்று சகோதரர்களுக்கும் ஒரு சகோதரி இருந்தாள். மூவரும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்ய கிளம்ப வேண்டும் என்ற காரணத்திற்காக ஊர்வாசிகளிடையே விசாரித்து புர்சீஸாவின் பாதுகாப்பில் சகோதரியை வைத்து விட்டுச் சென்றார்கள்.
புர்சீஸாவும் தனது வீட்டிற்கு அருகிலே ஒரு வீ்ட்டில் அப்பெண்ணை தங்க வைத்து உணவென்று தேவைப்பட்டால் கதவை தட்டி உணவை வைத்து சென்றார்.
ஷைத்தான் சோதிக்க நாடினான்
அவனிடத்திலே வந்து சில தடுமாற்றங்களை ஏற்படுத்தினான் 'புர்சீஸா தினமும் உணவை வைக்கிறாய். அந்த பெண் சுகமாக இருக்கிறாளா என்பதை நீ எப்படி அறிவாய் அந்த பெண்ணுக்கு ஸலாம் கூறு அந்த பெண் ஸலாம் சொன்னால் அந்த பெண் சுகமாகத்தான் இருக்கிறாள் என்பதை நீ அறிந்து கொள்ளலாம்.
புர்சீஸா நாளடைவில் அந்த ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு அந்த பெண்ணுக்கு ஸலாம் சொன்னார். அந்த பெண்ணும் பதில் சொன்னார்கள். அவரும் அந்த நிகழ்வை அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தார்.
மறுபடியும் ஷைத்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு வந்தான்..'புர்சீஸா அந்த பெண்ணுக்கு ஸலாம் சொன்னாய் சரி, அந்த பெண்ணுக்கு ஏதாவது தேவை இருக்கிறதா என்று ஏன் கேட்கமாட்டாய்? நீ தான் அந்த பெண்ணுக்கு பொறுப்பாளி‘
புர்சீஸா ஷைத்தானின் சூழ்ச்சிக்கு மறுபடியும் தன்னை உட்படுத்திக்கொண்டார். அந்த பெண்ணிடத்திலே சென்று ஸலாம் சொன்னார். சுகமாக இருக்கிறீர்களா ஏதாவது தேவை இருக்கிறதா என்று கேட்டார்? தேவை இருந்தால் அந்த பெண் சொன்னாள் அந்த தேவையை அவரும் நிறைவேற்றினார்.
மறுபடியும் உள்ளத்திலே வந்தான் 'வெளியே நின்று பேசுகின்றாய் ஊர் மக்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் உள்ளே சென்று பேசு என்று சொன்னான். புர்சீஸா அதற்கும் கட்டுப்பட்டார்.
வணக்கசாலியாக இருந்தவர். அல்லாஹ்வை அஞ்சியவர். ஷைத்தான் எந்த வழியில் சோதித்தாலும் வெற்றி காண்பவர். ஆனால் ஒரு பெண்ணின் மூலம் புர்சீஸாவை தொடர்ச்சியாக ஷைத்தான் சோதித்தான் அந்த சோதனைகளில் புர்சீஸா தோற்றுக்கொண்டே இருந்தார். ஷைத்தான் ஜெய்த்துக் கொண்டே இருந்தான்.
ஷைத்தானுக்கான அடிச்சுவடுகள்
அது தான் அல்லாஹ் அல்-குர்ஆனில் ஷைத்தான் குறித்து எச்சரிக்கை செய்துள்ளான். இது தொடர்பாக அவன் கூறியது ‘ ஈமான் கொண்டவர்களே ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். ஒரு அடியை எடுத்து வைப்பீர்கள் ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு அடுத்த அடியை எடுத்து வைக்கச்சொல்லுவான். அடுத்த அடியை எடுத்து வைப்பீர்கள்.
அதின் விபரீதங்களின் எல்லைக்கு அவன் அழைத்துச்சென்று விடுவான்.அதனால் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் என்று அல்லாஹ் முஃமீன்களுக்கு அறிவுரை செய்கின்றான்.
புர்சீஸா அந்த ஷைத்தானின் சூழ்ச்சிக்கு கட்டுப்பட்டுக்கொண்டே வந்தார். தனிமையில் பேசிய புர்சீஸாவை தவறான செயலை செய்யும் படி ஏவினான். அவரும் அந்த பெண்ணிடத்திலே தவறான முறையில் நடந்து கொண்டார். இதன் விளைவாக அந்த பெண் குழந்தையும் பெற்றெடுத்தாள்.
ஷைத்தான் தொடர்ந்தும் சோதனைகளை கொண்டு தாக்கினான். மறுபடியும் அவர் உள்ளத்தில் ‘உன் தவறான செய்கையின் காரணமாக அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டாள்.
அந்த குழந்தை இருந்தால் மக்களுக்கு மத்தியில் உன் தவறுகள் அடையாளம் காட்டப்பட்டுவிடும். ஆகவே அந்த குழந்தையை கொலை செய் என்று ஏவினான். ஷைத்தானுக்கு கட்டுப்பட்ட புர்சீஸா அந்த குழந்தையை கொலை செய்தார்.
குழந்தையை கொலை செய்து விட்டாய் அந்த தாய் உயிரோடு தானே இருக்கிறாள். அந்த பெண்ணை நீ கொலை செய்யவில்லை என்றால் உன்னுடைய குற்றம் உலகத்திற்கு எடுத்துக்காட்டப்படும் என மறுபடியும் தூண்டினான். மறுபடியும் கட்டுப்பட்ட புர்சீஸா அந்த பெண்ணையும் கொலை செய்து புதைத்தார்.
சாதாரண ஸலாதம்..
ஒரு சாதாரண ஸலாத்தை கொண்டு தனது தவறை ஆரம்பித்தவர், அந்த தவறு ஷைத்தானின் வழிச்சுவடுகளோடு பின்பற்றப்பட்டு ஒரு பெண்ணை கொலை செய்யும் அளவிற்கு தூண்டியுள்ளது.
ஷைத்தானின் சோதனை இன்னும் நிற்கவில்லை...அவனின் நாட்டத்தை நிறைவேற்ற அந்த சோதனையை இன்னும் தொடர்ந்தான்
அல்லாஹ்வின் பாதையில் பயணித்த அந்த மூன்று சகோதரர்களும் திரும்பி வந்தார்கள். சகோதரியை தேடினார்கள். புர்சீஸாவின் குற்றம் வெளியே வந்தது. இதற்கு புர்சீஸா சொன்ன பதில் அந்த பெண் நோய்வாய்ப்பட்டு மரணித்து விட்டார் என்று.
புர்சீஸாவின் உண்மையை ஏற்றுக்கொண்டு அந்த மூவரும் திரும்பினார்கள். ஷைத்தான் அம்மூவரினதும் கனவில் தோன்றி உண்மையை எடுத்துக்காட்டி அப்பெண் அடக்கமாக்கிய இடத்தையும் எடுத்துக்காட்டினான்.
மூவரும் சென்று பார்த்தார்கள் உண்மையை அறிந்து கொண்டாார்கள். அவர் மீதுள்ள கோபத்தை வெளிக்காட்டுவதாக அவரின் தொழும் இடத்தை இடித்தார்கள். மக்கள் முன்னிலையில் அவரின் செயலை அம்பலப்படுத்தி தாக்கினார்கள்.
அந்த நேரத்தில் வந்த ஷைத்தான் “புர்சீஸா நான் யார் தெரியுமா? புர்சீஸா சொன்னார் எனக்கு தெரியாது. நான்தான் உன்ன வழிகெடுத்தவன் ஆனால் நான் இப்போது இப்படி ஒரு சோதனையிலிரந்து உன்னை பாதுகாக்கிறேன். ஒரே ஒரு செயலை செய்ய வேண்டும்.
எல்லாம் செய்து விட்டேன் என்ன அந்த செயல் என வினவிய போது ஷைத்தான் கூறினான் ‘எல்லாம செய்தாய். ஒரே ஒரு செயலை செய் எல்லாவற்றிலிருந்தும் உனக்கு பாதுகாப்பு. எனக்கு சுஜூது செய்.
அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்த ஒரு அடியான். அல்லாஹ்வின் வணக்கத்தில் இன்பம் கண்ட அடியான் ஷைத்தானால் சோதிக்கப்பட்டார். மிகப்பபெரிய இக்கட்டில் உள்ளார் சுஜூது செய்தால் விடுதலை என்று ஷைத்தான் சொல்லுகின்றான்.
ஒரு சுஜூது தானே புர்சீஸா ஷைத்தானுக்கு சுஜூது செய்ய ஆயத்தமாகி சுஜூதை செய்கிறார். ஷைத்தான் கூறுகின்றான் ‘உன்னிலிருந்து நான் விலகிக் கொள்கின்றேன் என்று...
ஊர்வாசிகள் புர்சீஸாவை தாக்கி கொலை செய்து விடுகின்றார்கள்.
ஷைத்தானின் சூழ்ச்சியில் குப்ரி மற்றும் ஷிர்க்கில் ஈடுபட்ட நிலையில் மரணித்துவிட்டார்.
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். இந்த புர்சீஸாவின் வாழ்க்கை எம் அனைவருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும். சிறிய தவறில் ஆரம்பித்து முழு வாழ்க்கையும் எல்லை மீறி சூழ்ச்சிகளுக்கு ஆளாக நேரிடும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |