ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகள்!
வடக்கில், கிழக்கில் சிதைவடைந்துள்ள பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நேற்றைய தினம்(07) நாடாளுமன்றத்திவ் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒலுவில் துறைமுகம் தொடர்பில் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் எந்தவொரு விடயங்களும் முன்வைக்கப்படவில்லை. இது சம்பந்தமாக நான் ஏற்கனவே பேசியிருகின்றேன். ஒலுவில் துறைமுகத்தினால் அந்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கும் மீனவர்களுக்கும் எந்தவொரு பயனும் இல்லை.
பாலங்கள் புனரமைப்பு
எனவே, இது சம்பந்தமாக உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்பதை சபையில் தெளிவுபடுத்துமாறு வேண்டுகின்றேன்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிட்டங்கி பாலம், மாவடிப்பள்ளி பாலம் ஆகியன மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத ஒன்றாக உள்ளது. இந்த இரண்டு பாலங்களும் மிகவும் முக்கியமானவை. வரவுசெலவுத் திட்டத்திலாவது இதை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
மேலும், மாவடிப்பள்ளி - கல்முனை பாதைக்கான மாற்றுப்பாதை போடப்பட்டு, ஏதோ காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. அந்தப் பாதை உயர்த்தி போடப்படாமையினால், பொலிவேரியன் கிராமம் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதி மக்களும் பாரிய அவலங்களுக்குள்ளாகினர்.
எனவே, இது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றேன்.
வீதிகள் புனரமைப்பு
அதேபோன்று, ஒலுவில், அஷ்ரப் நகரை ஊடறுத்துச் செல்கின்ற தீகவாபி பாதையையும் கொங்கிரீட் அல்லது காப்பட் வீதியாக பூரணப்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. மன்னார் நகரிலிருந்து புகையிரத நிலையத்திற்கு செல்கின்ற, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) கீழ் உள்ள முக்கியமான பாதை இன்னும் அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கின்றது.
அதேபோன்று, முருங்கன் - சிலாவத்துறை வீதி ஆகியவற்றையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
மேலும், வட்டுவாகள் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ரூபா நீங்கள் ஒதுக்கியிருக்கின்றீர்கள். அதற்கு வன்னி மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றோம். ஆனால், அதன் மதிப்பீடு 2750 மில்லியன் ரூபாவாகும்.
எனவே, இது தொடர்பில் பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அதேபோன்று, வவுனியா, பரயனாளங்குளம் பாதை, வெளிக்குளம், மாமடுவ பாதையும் இன்னும் புனரமைக்கப்படாமல் இருக்கின்றன.
நேரியகுளத்திலிருந்து நெளுக்குளம் செல்கின்ற பாதையில் 12 கிலோமீட்டரில் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. மழை காலங்களில் வெள்ளத்தினால் அப்பகுதி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
பாவனைக்கு உகந்ததல்லாத பாதைகளின் நிலை
புத்தளம் நகரத்தில் உள்ள பாதைகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல், சாதாரண ஆட்டோ ஒன்றுகூட செல்ல முடியாத துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. நான் கடந்த அரசாங்கத்துடன் பேசி, 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
புதிய அரசு வந்ததும் அந்த நிதி சுற்றறிக்கை மூலம் மீளப் பெறப்பட்டுள்ளது.
அத்துடன், இராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்குமான கப்பல் சேவை இருந்த காலத்தில், மன்னார் ஒரு பொருளாதார கேந்திர தளமாக விளங்கியது.
அன்றைய காலகட்டத்தில், அந்த மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டிருந்தார்கள். எனவே, இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும். அதேபோன்று, மன்னார் - புத்தளம் பாதை, மன்னாரிலிருந்து மறிச்சுக்கட்டி வரை, புத்தளம் முதல் எலுவன்குளம் வரையிலும் காப்பட் பாதையாக போடப்பட்டுள்ளது.
சிறிய பகுதியே புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகின்றது. சில அரசு சார்பற்ற நிறுவனங்கள், அவர்களின் சொந்த தேவைகளுக்காக, அந்தப் பாதையை மூடுமாறும் புனரமைக்க வேண்டாம் எனவும் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்கள்.
ஆனால், நீதிமன்றம் இந்தப் பாதையை மூடுமாறு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, அமைச்சர் பிமல் ரத்னாயக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, சட்டமா அதிபருடன் பேசி, சுற்றாடல் அமைச்சினது அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, இந்தப் பாதையை மக்கள் பாவனைக்கு புனரமைத்துக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கோரிக்கைகள்
நூறு வருடத்திற்கு மேலாக பழமை வாய்ந்த அந்தப் பாதையினை பயன்படுத்தப்படுகின்ற போது 100 கிலோமீட்டர் மிச்சப்படுத்தப்படும். அதேபோன்று, குருநாகல் - கண்டி அதிவேகப் பாதையினை வடக்கு, கிழக்குடன் இணைப்பதன் மூலம், அந்தப் பிரதேசங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும்.
சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் பூரணப்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றன. மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களின் போது, அந்த வீட்டுத் திட்டங்களில் வசிக்கும் மக்கள் எம்மிடம் வந்து அழுது புலம்புகின்றனர்.
ஆட்சி மாறியதன் பின்னர் கோட்டா அரசாங்கம் அந்த வீட்டுத் திட்டப் பணிகளை பூர்த்தி செய்யவில்லை. கோட்டாவின் அவ்வாறான இனவாத செயற்பாடுகளினால்தான் அவர் விரட்டியடிக்கப்பட்டார்.
எனவே, அவ்வாறான செயல்களை நீங்களும் செய்யாதீர்கள். சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது மக்களுக்கான வீட்டுத்திட்டம். எனவே, அந்த வீடுகளை கட்டி முடிக்க உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அத்துடன், சிலாவத்துறையில் ஒரு கலாச்சார மண்டபத்தை கட்டினோம். 20 சதவீத வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் நான்கு வருட காலமாக எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்யாமல் இழுத்தடித்தது.
இந்தக் கட்டிடத்தின் பணிகளை நிறைவுசெய்து தாருங்கள். அரசிடம் பணம் இல்லையெனில் வெளிநாடுகளின் உதவியைப் பெற்றாவது இந்தக் கட்டிடத்தின் பணிகளை நிறைவுசெய்ய முன்வாருங்கள்.
இது தொடர்பில் சில நாடுகளுடன் நான் பேசியுள்ளேன். வெளிநாடுகள் உதவி செய்யத் தயாராக உள்ளன என கோரிக்கைகள் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், இவற்றுக்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக, "சுற்றாடல் பிரதி அமைச்சர் நாளை மறுதினம் வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நீங்கள் குறிப்பிட்ட இடங்களையும் அவர் பார்வையிடுவார். அதன் பிற்பாடு தங்களுடன் கலந்துரையாடுகின்றேன்" என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |