நாளுக்கு நாள் வஞ்சிக்கப்படும் 10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே ஆட்சி அதிகாரத்துக்கு உகந்தது என்று தெரிவித்துள்ள குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, இனத்தின் பெயரில் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலை விடயத்தில் அரசின் உண்மையான இறுதி நிலைப்பாட்டைப் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
தேசிய சிறைக் கைதிகள் தினத்தையொட்டி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து யாழ். ஊடக அமையத்தில் இன்று (12) நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள்
இதன்போது அறிக்கையொன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், "ஜனநாயகப் பெயர் கொண்டமைந்துள்ள இலங்கை நாட்டில், இன்று 116 ஆவது தேசிய சிறைக் கைதிகள் தின நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
சுமார் 13 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்திருக்கக்கூடிய இட வசதியைக் கொண்ட சிறைக்கூடங்களுக்குள் 24 ஆயிரம் கைதிகளை திணித்து அடைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற நிலையிலையே சிறைத்துறை இந்தக் கைதிகள் தின நிகழ்வை மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இருப்பினும் உணவு, நீர், சுகாதாரம், மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் போதுமற்ற நிலையில் பெயருக்காகக் கொண்டாடப்படுகின்றதா இந்தத் தேசிய சிறைக் கைதிகள் தினம்? என்கின்ற கேள்வி எழுகின்றது.
இத்தனை மோசமான கட்டமைப்பைக் கொண்டியங்கும் சிறைக்குள்ளேயே சமூகத்தை நேசித்த எமது தமிழ் அரசியல் கைதிகள், 30 ஆண்டுகளாக வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை கொடூரமானது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |