மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கை : முற்றுகையிடப்பட்ட உணவகங்கள்
மட்டக்களப்பில் சுகாதாரமில்லாத மற்றும் எலி கடித்த உணவுகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த பிரதேசத்திலுள்ள கடைகளில் பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது மட்டக்களப்பு நாவற்குடா பொது சுகாதார பகுதியிலுள்ள கடைகளை இலக்காக கொண்டு நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுற்றிவளைக்கப்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் பின்பற்றப்படாத கடைகள்
பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில்,
மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வந்த 5 உணவகங்களும், அவற்றில் எலிகடித்த சீனி மூட்டையை விற்பனைக்கு வைத்திருந்த உணவகங்களும் அவற்றில் இருந்து உண்ண பொருத்தமில்லாத பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரனின் ஆலோசனைக்கமைய நாவற்குடா பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த பிரதேசத்திலுள்ள கடைகள் மீதான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் துரித உணவுகள் மற்றும் மரவள்ளி சீவல், வடை போன்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்யும் 5 கடைகளில் மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த பொருட்களை கொண்டு உணவு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
அத்துடன், பல்பொருள் அங்காடி கடையான பூட்சிற்றி ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த எலிகடித்த சீனி மூட்டையையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத பொருட்களைவ விற்பனை செய்த 6 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குல் செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


