மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கத்தினர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மாளிகைக்காடு(Malikaikadu) ஜனாஸா நலன்புரி சங்கத்தினருக்கு ஜனாதிபதி கௌரவிப்பு செய்ய வேண்டும் என தனியார் நிறுவனம் ஒன்றினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது
அம்பாறை மாவட்டம் காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்த நிலையில் இதில் காணாமல் போனோரை தேடும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இதில் 5பேர் உயிருடனும் 8பேர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் 5 நாளாக போராடி வந்த மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பையும் அதனுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்ட அனைவரையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக அழைத்து கௌரவித்து உற்சாகப்படுத்த வேண்டும் என கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
கோரிக்கை..
மேலும், அந்த கோரிக்கையில் தெரிவித்ததாவது,
காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் அன்றையதினம் மாலை தேடுதல் நடவடிக்கையின் போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
இந்த மீட்புப்பணியில் பாதுகாப்பு படையினரும் இணைந்திருந்த போதிலும் இவ்வாறான சிவில் அமைப்புக்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாக இருந்ததை நாம் இங்கு அடிகோடிட்டு காட்ட வேண்டியுள்ளது.
எனினும், மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இடம்பெற்று வந்தது.
மீட்கப்பட்ட ஜனாஸாக்கள்
அதன்போது நிந்தவூரிலுள்ள அரபுக் கல்லூரி மாணவர்களின் 06 ஜனாஸாவும், வாகன சாரதியின் ஜனாஸாவும், இன்னும் ஒரு இளைஞரின் ஜனாஸாவுமாக மொத்தம் 08 ஜனாஸாக்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஐந்து நாட்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் இவர்கள் முன்னெடுத்த பணியை பாராட்டி கௌரவிக்க வேண்டிய பொறுப்பு இலங்கையர்களாகவும், மனிதாபிமானிகளாகவும் நமக்கு இருப்பதாக நம்புகிறோம்.
இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதனை துரிதகதியில் முன்னெடுக்க தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |