ஷேக் ஹசீனாவின் உரை! இந்தியாவின் செயலால் அதிர்ச்சியடைந்த பங்களாதேஷ்
இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா புதுடெல்லியில் பொது உரையாற்ற இந்தியா அனுமதி அளித்திருப்பது தங்களுக்கு "அதிர்ச்சியும் ஆச்சரியமும்" அளிப்பதாக பங்களாதேஸ் தெரிவித்துள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு "கொலையாளி" மற்றும் "தப்பியோடியவர்" இந்தியத் தலைநகரில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்ற அனுமதித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்று பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சு சாடியுள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்
மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 2024 ஓகஸ்ட் மாதம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற 78 வயதான ஷேக் ஹசீனா, கடந்த வெள்ளிக்கிழமை (23) டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஒலிப்பதிவு மூலம் உரையாற்றினார்.

இது பங்களாதேஸை விட்டு வெளியேறிய பின் ஆற்றிய முதல் பொது உரையாகும்.
இதன்போது, தனது உரையில், இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸின் கீழ் பங்களாதேஸில் ஒருபோதும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறாது என்று ஹசீனா விமர்சித்திருந்தார்.
ஒப்பந்தம்
இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில், ஹசீனாவை ஒப்படைக்குமாறு பலமுறை விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியா இதுவரை செவிசாய்க்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, அவர் இந்திய மண்ணில் இருந்து பங்களாதேஸின் ஜனநாயக மாற்றத்திற்கு அச்சுறுத்தலாகப் பேசுவதை இந்தியா அனுமதிப்பது கவலையளிப்பதாக பங்களாதேஸ் தெரிவித்துள்ளது.
வன்முறையைத் தூண்டியமை மற்றும் படுகொலைகளைத் தடுக்கத் தவறியமை போன்ற குற்றங்களுக்காக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த நவம்பர் மாதம் டாக்கா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.