கிழக்கில் பொது மக்களால் கௌரவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி!
சுமார் 37 வருடங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பணியாற்றி பல பதவியுயர்வுகளையும் பெற்ற பிரதம பொலிஸ் பரிசோதகர் மீரா லெப்பை றபீக்(Meera Lebbe Rafeek) இனை கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று(11) மாலை நடைபெற்றுள்ளது.
சேவைகள்
1988 ஏப்ரல் 10 ஆம் திகதி உப பொலிஸ் உத்தியோகத்தராக சென்றல் கேம்ப் பொலிஸ் நிலையத்தில் தனது பணியை ஆரம்பித்த இவர், கொழும்பு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனது பணியை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்திருந்தார்.
இறுதியாக கல்முனை பொலிஸ் நிலைய பதில் தலைமை பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய நிலையில் தற்போது ஒய்வு பெற்றுச் செல்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது சேவைக்காலத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மறைந்த அஷ்ரபுக்கும், பின்னர் அவரது மனைவி அமைச்சராக இருந்த போது அவருக்கும் பிரதம பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
தொடர்ந்தும் இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கலாநிதி அஜித் றோஹன,
ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எல்.றபீக் POLICE என்ற சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் பிரதிபலிக்கும் வார்த்தைகளுக்கு ஒப்ப செயற்ப்பட்ட ஓர் சிறந்த அதிகாரி.
அத்துடன், ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எல். றபீக், அவரது சேவைக்காலத்தில் மிகுந்த நேர்மையாகவும் பொதுமக்களோடு மிகுந்த அன்னியோன்யமாக பழகுபவராகவும் இருந்ததுடன், மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பக்கச்சார்பற்ற முறையில் அவர் எடுத்துக்கொண்ட வழிமுறைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டது என குறிப்பிட்டார்.
கௌரவிக்கும் நிகழ்வு
குறித்த நிகழ்வில் இவரின் சேவையை பாராட்டி, அதிகாரிகளாலும் பொது மக்களாலும் பொன்னாடை போர்த்தியும் ஞாபக சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், இந்த கௌரவிக்கும் நிகழ்வில் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஓய்வு பெறும் அதிகாரி றபீக்கின் குடும்ப உறவினர்கள், சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர், வர்த்தகர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், இங்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.அஜித் றோஹனவும் கௌரவ அதிதிகளாக அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.கே.பண்டார, அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் -1 சேனாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |