இலங்கை கடல் எல்லை தாக்குதலுக்கு கொடிய பதிலடி கொடுக்கப்படும்! ஈரான் பகிரங்கம்
இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட தாக்குதலில் பல ஈரான் கடற்படை வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட எதிரிகளுக்கு “பயங்கரமான பதிலடி” அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசு ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி, “உயிரிழந்த வீரர்களை நினைவுகூர்ந்த அவர், “எதிரியின் குற்றத்தை நாம் மறக்கமாட்டோம். நம் வீரர்களின் இரத்தத்திற்கு நிச்சயம் பழிவாங்குவோம்” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தாக்குதலுக்கு எதிரான பதிலடி எப்போது, எவ்வாறு நிகழும் என்பது எதிரிகளுக்கு எதிர்பாராததாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஈரான் படைத்தளபதி அமீர் ஹடாமி வெளியிட்ட அறிக்கையில்,
IRIS Dena கப்பலில் உயிரிழந்தவர்களின் மரணம் “பதில் இன்றி விடப்படாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த கப்பல் சமாதான பணியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
விசாரணை தகவலின்படி, IRIS Dena போர் கப்பல் இலங்கையின் காலி கடற்கரைக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ தாக்குதலில் மூழ்கியது.
கப்பலில் இருந்த சுமார் 180 பேரில், 87 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இந்திய கடற்படை உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் இலங்கைக்கு ஆதரவளித்தது.