மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்:பொதுமக்கள் விசனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (16) பன்சேனை மற்றும் புல்லுமலை பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் ஊடுருவிய காட்டு யானைகள் விவசாயிகளின் குடிசையினையும் பல தென்னை மரங்களையும் அழித்துச் சேதப்படுத்தியுள்ளது.
இந்த அனர்த்தத்தைப் பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சனைக்குத் தீர்வு
அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஏழு மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, கிரான், ஏறாவூர் பற்று (செங்கலடி ) வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 950 தொடக்கம் 1200 எண்ணிக்கையிலான தென்னை மரங்களை காட்டு யானைகள் அழித்து துவசம் செய்துள்ளது.
இவ்வாறான பயன் தரும் தென்னை மரங்கள் அழிப்பின் தாக்கத்தை அன்றாடம் கூலி தொழில் புரிந்து, வாழ்க்கை நடாத்தி வரும் இம்மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர்.
இது எதிர்காலத்தில் உள்ளூர் கிராமிய தேங்காய் உற்பத்தியையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அதிகம் பாதிக்கச் செய்யும்.
இந்த விடயங்களை நான் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களிலும் கூறியுள்ளேன் ஆனால் இந்த மாவட்ட மக்களின் காட்டு யானை பிரச்சனைக்குத் தீர்வு இல்லாமலே உள்ளது என இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |