அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசமாகிய நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி!
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசையாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதம்பாவா அஸ்பரும், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல்.இர்பானும் தெரிவாகியுள்ளனர்.
இந்த தெரிவுகள், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை அதிகாரியுமான ஆதம்லெப்பை முகம்மது அஸ்மி தலைமையில், நேற்று (02) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்றன.
இதற்கமைவாக, தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளுக்கான வாக்கெடுப்பு நடந்தது. சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 6, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4, தேசிய மக்கள் சக்தி - 2, ஐக்கிய மக்கள் சக்தி - 1 என மொத்தம் 13 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.
இரகசிய வாக்கெடுப்பு
தவிசாளர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் வேட்பாளராக முன்னிலையிலிருந்தனர். அவர்களாவர், ஆதம்பாவா அஸ்பரும், சட்டத்தரணி ஆதம்லெப்பை றியாஸ் ஆதமுமாவர்.
இதில் ஏற்பட்ட விவாதத்திற்கு பின்னர், இரகசிய வாக்கெடுப்பு முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது.
இரகசிய வாக்கெடுப்பில் ஆதம்பாவா அஸ்பர் 6 வாக்குகள் பெற்றதுடன், எதிரணியை சேர்ந்த வேட்பாளர் றியாஸ் ஆதம் 5 வாக்குகள் பெற்றார்.
இதன் அடிப்படையில், 1 வாக்கு முன்னிலையில் ஆதம்பாவா அஸ்பர் தவிசையாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வாக்கெடுப்பின்போது தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த இருவர் நடுநிலையாக இருந்தனர்.
தவிசாளர் தெரிவு
உப தவிசாளர் பதவிக்கு போட்டியாளராக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சட்டத்தரணி முகம்மது இப்ராலெப்பை இர்பான் மட்டுமே இருந்ததால், அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் றிசாட் பதியுதீன், அஷ்ரப் தாஹிர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
புதிய நிர்வாகத் தெரிவுகள் நடைபெறுவதற்கிடையில், சபை வளாகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு கூடுதல் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












