மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(02) நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பல முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார்.
விசேட கலந்துரையாடல்
இந்தக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் பங்கேற்றனர்.
முக்கிய முன்னெடுப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் கூட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
பிரச்சினைகளுக்கான தீர்வு
இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய வீதி அபிவிருத்திக்காக ரூபா 450 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூபா 250 மில்லியன் இந்த வருடத்திற்குள் செலவிடப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
கிரான் பாலம் அமைத்தல், வாகரையில் இ.போ.ச உப நிலையம்(CTB sub Station) அமைத்தல், மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தை அண்மித்த புகையிரத நிலையத்தை விஸ்தரித்தல், தம்மானவெளி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி கோருதல் போன்ற முன்மொழிவுகள் சிறிநாத்தால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த முன்மொழிவுகள் அனைத்தும் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டு, கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள் மற்றும் பல திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |