பொலன்னறுவையிலிருந்து புதிய சபாநாயகர்! வெளியாகவுள்ள தீர்மானம்
புதிய சபாநாயகராக, தேசிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜெகத் விக்ரமரத்னவை(Jagath Wickramaratne) நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சி தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் பதவி
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் விக்ரமரத்ன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவராவார்.
இந்த நிலையில், புதிய சபாநாயகராக அவரை நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, புதிய சபாநாயகர் யார் என்பது குறித்து இன்றையதினம் இடம்பெறவுள்ள ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர் சபாநாயகராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, தனது கலாநிதி பட்டம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து அந்த பதவியில் இருந்து விலகியிருந்தார்.
புதிய சபாநாயகர்
அத்துடன், சபாநாயகராக இருந்த அசோக ரன்வலவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானம் மேற்கொண்டிருந்ததுடன், இலங்கை அரசியல் பரப்பில் பேசுபொருளாக இந்த விடயம் மாறியிருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே சபாநாயகர் பதவியில் இருந்து அசோக ரன்வல விலகியிருந்த நிலையில், தற்போது புதிய சபாநாயகராக நியமிக்கப்படவுள்ளவர் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தநிலையில், புதிய சபாநாயகர் தொடர்பில் இன்றையதினம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, நாளைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |