நபி வழி மருத்துவம்- பால்
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான் (ஆடு, மாடு, ஒட்டகம்) ஆகிய கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு.
ரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற பாலை(உற்பத்தி செய்து) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம், அது அருந்துவதற்கு மிக்க இன்பகரமானது.
“யாருக்கு அல்லாஹ் பாலை பருக கொடுத்தானோ அவர் பருகியபின் அல்லாஹீம்ம பாரிக் லனா ஃபீஹி வ ஸித்னா மின்ஹீ (இறைவா எங்களுக்கு இதில் அபிவிருத்தி செய்வாயாக இதை எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக) என்று கூறட்டும்.
நிச்சயமாக பாலைத்தவிர மனிதனுக்கு போதுமான உணவையும் பானத்தையும் நான் அறியமாட்டேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கன்று ஈன்று நாற்பது நாள்களுக்கு பிறகுள்ள பாலே தேர்வு செய்யப்பட்ட பாலாகும். மிகுந்த வெண்மையாகவும், அதன் வாடை தூய்மையாகவும் இனிய சுவையுடையதாகவும் இருப்பதே தரமான பாலாகும்.
அத்தகைய பாலில் சாதாரண இனிப்புத்தன்மையும், நடுநிலையான கொழுப்புத்தன்மையும் இருக்கும்.
நல்ல முறையில் மேய்ந்து தண்ணீர் பருகிய ஆரோக்கியமான இளம்பிராணியிடமிருந்து கறக்கப்பட்ட பால் போற்றத்தக்கது.
அத்தகைய பால் நல்ல இரத்தத்தை உற்பத்தி செய்யும், வறண்டுபோன உடலை ஈரத்தன்மையுடையதாக ஆக்கும்.
நல்ல உணவுச்சத்தாக மாறும், மனக்குழப்பம், கவலை, சோக நோய்கள் உள்ளிட்டவற்றை போக்கும், பாலை தேனுடன் கலந்து பருகினால் உடலின் கெட்ட இயல்புகள் மாறி உள்புண்களை ஆற்றி தூய்மையடையச் செய்துவிடும்.
நாட்டுச்சக்கரையுடன் கலந்து பருகினால் உடலின் நிறத்தை முற்றிலும் அழகாக்கும். பாலானது தாம்பத்திய உறவின் கேடுகளை தடுத்துவிடுகிறது.
உள்ளத்திற்கும் நுரையீரலுக்கும் உகந்ததாக ஆகிவிடுகிறது. தலை, இரைப்பை, ஈரல், கல்லீரல் ஆகியவற்றிற்கு உகந்தது இல்லை.
பாலை மிகுதியாக பருகுவது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையூறு செய்யும். இதனால் அதனை பருகியபின் தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது, ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள்.
அப்போது இதில் ”கொழுப்பு இருக்கிறது” என்று சொன்னார்கள். காய்ச்சல் உடையோருக்கும், தலைவலி உடையோருக்கும் இது மோசமானது, மூளைக்கும், பலவீனமான தலைக்கும் இடையூறு ஏற்படுத்தும்.
தொடர்ந்து இதனை அருந்துவது பார்வை குறைபாட்டையும், பார்வையில் இருளையும் மூட்டு வலியையும், மண்ணீரலில் அடைப்பையும், இரைப்பை, குடல்களில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
இக்குறைகளை சரிசெய்ய தேனையும் இஞ்சி மரப்பாவையும் உண்ண வேண்டும்.
செம்மறியாட்டுப்பால்
பால்களிலேயே அதிகமான கெட்டித்தன்மையும் ஈரத்தன்மையும் கொண்டதாகும்.
செம்மறியாட்டுப்பால் பால்களிலேயே அதிகமான கெட்டித்தன்மையும் ஈரத்தன்மையும் கொண்டதாகும்.
வெள்ளாட்டுப்பாலிலும் பசுமாட்டுப் பாலிலும் இல்லாத கொழுப்புத்தன்மையும் கெட்ட வாடையும் இதில் உள்ளன.
தேவையற்ற சளியை உண்டுபண்ணுகிறது. இப்பாலுடன் தண்ணீரை கலந்து பருக வேண்டும்,
அவ்வாறு செய்வதால் உடலுக்கு ஏற்படுகின்ற நோய்த்தன்மை குறைந்துவிடுவதோடு தாகத்தை தணிப்பதில் விரைந்து செயல்படுகிறது.
வெள்ளாட்டுப்பால்
இது மென்மையானதும் நடுநிலையானதும் ஆகும், வயிற்றோட்டத்தை ஏற்படுத்தக்கூடியது, வறண்ட உடலை குளிர்விக்கக்கூடியது, தொண்டை புண், வறட்டு இருமல், இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு சிறந்த பலன் தரும்.
பசும்பால்
இது உடலுக்கு ஊட்டச்சத்தை கொடுத்து அதனை செழிப்பாக்குகிறது, நடுநிலையான வயிற்றோட்டத்தை உண்டு பண்ணுகிறது.
ஆட்டுப்பாலுடன் ஒப்பிடுகையில் மென்மைத்தன்மையிலும், கொழுப்புத்தன்மையிலும் பால்களிலேயே மிகவும் நடுநிலையானதும் சிறப்பானதும் ஆகும்.
”நீங்கள் பசும்பாலை பருகுவதை கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால் அது எல்லா செடிகளையும் மேய்கிறது” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.