அகீகா- சட்டங்கள்
ஒரு குழந்தை பிறந்ததும் அதற்காக ஆட்டை பலியிடுவதற்கு அகீகா என்று பெயர். இதனை குழந்தை பிறந்ததில் இருந்து அது வளர்ந்து வாலிப வயதை எய்தும் வரை செய்யலாம்.
எனினும் குழந்தை பிறந்த ஏழாம் நாள் பொழுது உதயமான சற்று நேரத்தில் செய்வதே அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறை(சுன்னத்) ஆகும்.
அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அன்னை மர்யம் கிப்திய்யா(ரலி) அவர்கள் மூலமாக இப்ராஹீம் என்ற மகன் பிறந்தார்.
அவர் பிறந்த ஏழாம் நாள், அவருக்காக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆடுகளை அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு பங்கிட்டனர்.
பின்னர் குழந்தை இப்ராஹீமின் தலைமுடியை இறக்கி அதன் எடைக்கு எடை வெள்ளியை நிறுத்து அதனையும் ஏழைகளுக்கு அறம் செய்தனர்.
ஆண் குழந்தைகளுக்காக இரண்டு ஆடுகள், பெண் குழந்தைகளுக்காக ஓர் ஆட்டினை அகீகா கொடுக்க வேண்டும்.
அகீகா கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோயிலிருந்தும், ஆபத்துகளில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது மற்றும் அந்த குழந்தை பெற்றோர்களுக்கு அடங்கி நடப்பதாக இருக்கும்.
அகீகாவிற்கு தேர்வு செய்யப்படும் பிராணி குர்பானி கொடுக்கும் பிராணியை போன்றே இருக்க வேண்டும், ஒரு வயதிற்கு குறைந்த ஆடு, இரண்டு வயதிற்கு குறைந்த மாடு, உடல் ஊனமுற்றது(கண், காது, கால்) இவற்றை கொடுக்கக்கூடாது.
அகீகாவின் பொழுது ஆட்டின் எலும்புக்கு பாதகம் ஏற்படா வண்ணம் அதன் இறைச்சியை மட்டும் வெட்டி எடுப்பதும் சுன்னத் ஆகும்.
ஆட்டின் வலதுபக்க தொடையை பிரசவம் பார்த்த பெண்ணுக்கு (அவள் முஸ்லிமாக இருப்பின்) கொடுப்பதும் சுன்னத் ஆகும்.
இறைச்சியை மூன்று பங்காக்கி, அதில் ஒன்றை தமக்கு வைத்துக் கொண்டு, இரண்டாம் பங்கை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தந்துவிட வேண்டும்.
மூன்றாம் பங்கை ஏழைகளுக்கு அறம் செய்துவிட வேண்டும்.
அகீகா இறைச்சியை சமைத்தோ அல்லது சமைக்காமலோ உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கலாம், அதை பெற்றோர்கள் சாப்பிடுவதில் தவறில்லை.