அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாத மக்கள்!
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்குபதிவுகள் அம்பாறை(Ampara) மாவட்டத்தில் இன்று(06) சுமுகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மந்தகதியில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை 24.5 வீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல்
அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 4,78000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதனடிப்படையில், குறித்த தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 202 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும்.
இவ்வாறு உரிய இடங்களில் எண்ணப்பட்டு அப்பகுதிக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலகருக்கு தெரிவிக்கப்படும்.
பின்னர் உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகள் குறித்து உதவி தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவிப்பார்.
தொடர்ந்து வாக்குகள் உள்ளிட்ட சகல ஆவணங்களும் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்திற்கு எடுத்து வரப்படும். அதன்பின்னர் உத்தியோகபூர்வமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.
வாக்களிப்பு மையப்பாதுகாப்பு
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் வன்முறையற்ற அமைதியான தேர்தல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பெரியளவிலான வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை.
எனினும் சிறு சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பு ஊடாக கிடைக்கப்பெற்றிருந்தன. மேலும், தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
அத்தோடு, வாக்களிப்பு நிலையமான அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









