குமார வெல்கம நேர்மையான அரசியல்வாதி: ரிஷாட் புகழாரம்
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama) நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
அத்தோடு,கோத்தாபய ராஜபக்ச மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
விவாதம்
தொடர்ந்து உரையாற்றுகையில், “மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச். நந்தசேன மற்றும் டியுடர் குணசேகர ஆகியோர் தொடர்பில், இன்று இந்த விவாதம் மும்மொழியப்பட்டிருக்கிறது.
இவர்கள் மூவரும் நாட்டுக்கு பல நல்ல பணிகளைச் செய்தவர்கள். குறிப்பாக, குமார வெல்கமவுடன் நீண்ட காலம் பழகக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. அவர் ஒரு அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, இந்த நாட்டுக்கு நிறைய நல்ல பணிகளை செய்த ஒருவர்.
அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், போக்குவரத்து துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை செய்தவர். அவருடைய காலத்திலேதான், இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று, வடக்கு, தெற்குக்கான தொடருந்து பாதை, யாழ்ப்பாணம், கொழும்பு தொடருந்து பாதை மற்றும் மன்னார் தொடருந்து பாதை ஆகியவற்றின் புனரமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல நல்ல பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேபோன்று, பல இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கினார். அவர் நேர்மையான, பண்பான ஒரு அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்.
கோட்டாபய ராஜபக்ச
ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்சவை அந்தக் கட்சி முன்னிறுத்தியபோது, அந்தக் கட்சியிலேயே இருந்துகொண்டு, அவர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளராக இருந்தவர் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டும், அவரை எதிர்த்துப் பேசியவர்.
“கோட்டாபய இந்த நாட்டுக்கு தகுதியானவர் அல்ல, ஒரு பிரதேச சபை உறுப்பினராகக் கூட பணியாற்றாதவரிடத்திலே, ஜனாதிபதி பதவியை எவ்வாறு ஒப்படைக்கப் போகின்றீர்கள்?” என்று, தைரியமாக பேசிய ஒருவர்தான் குமார வெல்கம அவர் எதையும் நேர்மையாக, வெளிப்படையாக பேசுகின்ற, பக்குவமுள்ள ஒரு அரசியல்வாதி. அதுபோன்று, “அரகல” சமயத்தில், ஒரு சில அநியாயக்காரர்கள் அவரை அடித்துக் காயப்படுத்தி, கஷ்டமான நிலைக்கு ஆளாக்கினர்.
எனினும், அவர் யாரையும் கடிந்துகொள்ளாமல், அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவருடைய பணிகளை முன்னெடுத்து வந்தார்.
குமார வெல்கம அவர்களுடைய இழப்பு, இந்த நாட்டுக்கு குறிப்பாக, களுத்துறை மாவட்ட மக்களுக்கு பாரிய இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது கட்சி சார்பாக, ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
அதேபோன்று, எச். நந்தசேன நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறைதான் அவரால் வெற்றிபெற முடிந்தது. எனினும், அந்தக் காலப்பகுதியில், அனுராதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக, மதவாச்சிய தொகுதிக்கு பல நல்ல பணிகளைச் செய்திருக்கிறார்.
அவருடைய இழப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும். இத்தருணத்தில், அவரது உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும், அனுராதபுர மாவட்டத்தின் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை, கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், டியுடர் குணசேகர ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்காக, பல தியாகங்களை செய்த ஒருவர்.
எனவே, அவரது குடும்பத்தினருக்கும் எனது கட்சி சார்பில், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி” என்று குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |