அம்பாறையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கைகள்
அம்பாறையில்(Ampara) ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறைமா அதிபர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் யூ.எல்.மப்றூக் என்பவர் மீது கடந்த 02.07.2025 அட்டாளைச்சேனை பொது மைதானத்துக்கு அருகில் வைத்து தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதல் சம்பவம்
இந்த தாக்குதலை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான ஒரு குழுவினர் மேற்கொண்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.
தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் மப்றூக் அட்டாளைச்சேனை பொது மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது அங்கு காரில் வந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா என்பவர் மற்றும் இன்னுமிருவரும் மப்றூக் மீது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
“என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்” எனக் கேட்டவாறே மப்றூக் மீது றியா மசூர் என்பவர் தாக்குதல் நடத்தியதாக தனது காவல்துறை முறைப்பாட்டில் ஊடகவியலாளர் மப்றூக் தெரிவித்திருந்தார்.
றியா மசூர் மற்றும் அவருடன் வந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் காவல்துறை முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தகுந்த சட்ட நடவடிக்கை
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது அங்கிருந்தவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாகவும், இல்லா விட்டால் ஊடகவியலாளருக்கு உயிராபத்து ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்படி தாக்குதல் சம்பவம் ஊடகத் துறைக்கு பெரும் சவாலாகும்.
ஜனநாயகத்தை மதிக்கும் எவராலும் இதுபோன்ற வன்முறையை அனுமதிக்க முடியாது. யூ.எல்.மப்றூக் போன்ற நேர்மையான மற்றும் நடுநிலை செய்தியாளர்களை குறிவைக்கும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அரசியல் வாங்குரோத்தின் வெளிப்பாடாகும்.
வன்முறை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கு, கடந்த காலத்தில் மக்கள் தக்கபாடம் கற்றுக்கொடுத்துள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், காவல்துறைமா அதிபர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |