உலகளாவிய எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்ததையடுத்து, உலகளாவிய எண்ணெய் சந்தையில் விலை குறைதல் பதிவாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும், ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாயுக்கு 2.69 அமெரிக்க டொலர்கள் குறைந்து 68.79 டொலர்களாக விலைகுறைவடைந்தது.
இது 2025 ஜூன் 11க்குப் பிந்தைய மிகக் குறைந்த விலை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் விலை மாற்றம்
இதற்கு முந்தைய தினம், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூட முயற்சி செய்யக்கூடும் என்ற அச்சம் காரணமாக, எண்ணெய் விலை 3% உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 79 டொலரை நெருங்கியிருந்தது.
ஈரான், ஓபெக் அமைப்பில் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பதால், அந்த நாட்டில் நிலவும் பதற்றங்கள் சர்வதேச எண்ணெய் சந்தையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள அமைதி நிலை, எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இலங்கையின் சூழ்நிலையைப் பொருத்தவரை, இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இந்த புவிசார் நிலைமைகள் காரணமாக ஏற்படக்கூடிய எரிபொருள் நெருக்கடிகளை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கும் நிலையில் உள்ளது.
முன்னெச்சரிக்கையாக, நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து எண்ணெய் மாதிரிகளை பரிசோதிக்கும் பணிகளில் CPC தற்போது ஈடுபட்டு வருகிறது.
இந்த உலகளாவிய மாற்றங்களின் தாக்கம், வரவிருக்கும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் உணரப்படலாம் என CPC மதிப்பீடு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |