நெதன்யாகுவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மதத்தடை
ஈரானின் மிக முக்கிய மதத் தலைவரான பெரியாயத்துல்லா நசர் மகரெம் ஷிராசி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக ஃபத்வா எனப்படும் மததடையை அறிவித்துள்ளார்.
இந்த இருவரும் “கடவுளின் பகைவர்கள்” என அறிவித்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஷிராசி தனது மதரீதியான அறிவிப்பில், "இஸ்லாமிய குடியரசின் தலைவர் அல்லது மர்ஜாவை (மத வழிகாட்டி) மிரட்டும் எந்த நபரையும் அல்லது ஆட்சியையும் ‘முஹாரிப்’ என அழைக்கலாம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மதத்தடை
'முஹாரிப்' என்பது "கடவுளுக்கு எதிராக யுத்தம் செய்பவர்" என்ற அர்த்தம் கொண்டது.
ஈரானிய சட்டத்தின்படி, 'முஹாரிப்' என குறியிடப்பட்டவர்கள் மரண தண்டனை, சிலுவையில் அறையப்படுதல், துண்டிக்கப்படுதல் அல்லது நாடுகடத்தப்படுதல் போன்ற தண்டனைகளை எதிர்கொள்ளலாம்.
இதேவேளை, 'ஃபத்வா' என்பது மர்ஜா எனப்படும் உயர் ஷியா மதத் தலைவரால் வெளியிடப்படும் மதவியல் சட்ட விளக்கம் ஆகும். இது தனிநபர்கள் மட்டுமல்ல, இஸ்லாமிய நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டியதாகக் கருதப்படுகிறது.
இதன்படி, ஃபத்வா அறிவிப்பை விடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்களை தண்டிக்க உலக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என ஷிராசி அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், ஃபத்வாவை மீறி பகைவர்களுக்கு உதவும் எந்த முஸ்லிமும் அல்லது முஸ்லிம் நாடுகளும் ஹராம் (தடை செய்யப்பட்டவை)" என தெரிவிக்கப்படுகிறது.
ஃபத்வா அறிவிப்பு
இதேவேளை, முஸ்லிம் ஒருவர் தம் கடமையினை மேற்கொண்டு, இந்த போராட்டத்தில் துன்பம் அல்லது இழப்பை சந்தித்தாலும், அவர் இறைவனின் வழியில் போராடுபவனாகக் கருதப்பட்டு நன்மை பெருவார் எனவும் ஷிராசியின் ஃபத்வா வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த ஃபத்வா அறிவிப்பு, உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் பெரும் விவாதத்தையும் அரசியல் எதிர்வினைகளையும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒரு தனிநபருக்கு எதிராக இதுபோன்ற ஒரு ஃபத்வா பிறப்பிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1989 ஆம் ஆண்டில், இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஒரு ஃபத்வா பிறப்பிக்கப்பட்டது, அவரது புத்தகமான தி சாத்தானிக் வெர்சஸ் இஸ்லாத்தை அவமதிப்பதாகக் கூறி குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ருஷ்டி, பல கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து, 2023 இல் நடந்த ஒரு கத்திக்குத்தில் தனது ஒரு கண்ணை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |