வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!
வாழைச்சேனை கடற்பரப்பில் மீன்பிடித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில், கடற்றொழிலாளி ஒருவரின் உயிர் பறிபோனது குறித்து வாழைச்சேனை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 24ஆம் திகதியன்று மூவர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) அவர்கள் மீன்பிடித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, காலை 10.30 மணியளவில், வலையில் சிக்கிய பெரிய மீனை தூக்க முயற்சிக்கும் போது, அதில் ஒருவரான சஹாப்தீன் கடலில் தவறி விழுந்துள்ளார்.
மீனால் பறிபோன உயிர்
அந்த நேரத்தில், அந்த பெரிய மீனின் கொம்பு அவரது வயிற்றுப் பகுதியில் குத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயத்துடன் மீண்டும் படகில் ஏறிய அவர், "மீன் குத்தியது; கடும் வலி" எனத் தெரிவித்துள்ளதாக அவரது உடனிருந்த இருவரும் கூறியுள்ளனர்.
காயம் காரணமாக, அவரை உடனடியாக கரைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதும், மதியம் 12 மணியளவில் படகிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
விசாரணைகள் முன்னெடுப்பு
இரவு 11 மணிக்கு அவரது உடல் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மரணமடைந்தவர், 47 வயதான மீராலெப்பை சஹாப்தீன், கோறளைப்பற்று மத்தி – வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பாலைநகர் ரஹ்மானிய ஜும்ஆ பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த துயரான சம்பவம் தொடர்பான விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் மற்றும் மீன்பிடித் துறைமுக கடலோர பாதுகாப்புப் படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






