குடிவரவு திணைக்களத்துக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
பொது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற குழு, குடிவரவுத்திணைக்களத்தை வலியுறுத்தியுள்ளது.
தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி (Jagath Kumara Sumitraarachchi), குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
துறைசார் மேற்பார்வைக் குழு
புதிய "குடிவரவு" சட்டமூலத்தை பரிசீலிப்பதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் திறந்த மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கருத்துரைத்த, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ச இலுக்பிட்டிய, 2023 இல் கிட்டத்தட்ட 1 மில்லியன் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும் அவற்றில் 23 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் மீதமுள்ள 77வீதக் கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
கடவுச்சீட்டு
இந்தநிலையில் இ-பாஸ்போர்ட் முறை அக்டோபர் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், அத்தியாவசியமற்ற பொதுமக்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பணம் செலுத்தி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது மக்களின் உரிமை என்பதனால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில், கோரப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பாகும் என்றும் நாடாளுமன்றக்குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இல்லையென்றால் திணைக்களமும் அரசாங்கமும் மக்களால் கடும் அதிருப்திக்கு உள்ளாகும் என குழுவின் தலைவர் ஜகத் குமார சுமித்ராராச்சி சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |