தனக்கான சன்மானங்களை மக்களுக்கே அன்பளிக்கும் உயரிய சிந்தனையாளர் சஜித்! ரிஷாட் புகழாரம்
தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்ததாலுமே, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளோம்.
கட்சியின் உயர்பீடத்தில் இது குறித்து இரகசிய வாக்களிப்பு நடைபெற்றபோது கலந்துகொண்ட 47 பேரில், 31 பேர் சஜித்தை ஆதரித்தனர். நாடு பூராகவும் சென்று மக்களிடம் கருத்துக்கேட்டபோது, கட்சியின் உயர்பீடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.
நேர்மையான அரசியல்வாதி சஜித்
இதனால்தான், சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம். இனவாதமில்லாத, வாக்குறுதிகளைக் காப்பாற்றும் நேர்மையான அரசியல்வாதி சஜித். அவருக்கு வழங்கப்படும் சன்மானங்களை மக்களுக்கே அன்பளிக்கும் உயரிய சிந்தனையாளர்.
எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் சஜித் பிரேமதாச, தனது சொந்த தொகுதிக்கு மட்டுமின்றி முழு நாட்டுக்குமே உதவி செய்கிறார். காலத்தின் தேவைக்கேற்ற புதுப்புது திட்டங்களை செயற்படுத்தும் இவரிடம் நாட்டை ஒப்படைப்பதே சிறந்தது.
ஜனாதிபதியாக தெரிவானால், பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமென எமது கட்சி நிபந்தனை விதித்துள்ளது. 1967க்கு முன்னர் பலஸ்தீன் இருந்ததைப் போன்று, பலஸ்தீன் பிரதேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதே அதுவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |